காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் அறிக்கை: கடந்த,
2009ல் காந்தி பிறந்த நாளில், காந்திய மக்கள் இயக்கத்தை துவக்கினேன். இது,
கடந்த இரண்டு ஆண்டுகளாக காமராஜர் மக்கள் கட்சி என்ற பெயரில் இயங்கி
வருகிறது. பண வலிமை உள்ள கட்சிகள் தான் மக்களை சென்றடைய முடியும் என்பதால்,
தனித்து வத்துடன் இயங்க முடியாத நிலையில், வாசன் தலைமையில் இயங்கும்
த.மா.கா.,வில், வரும், 20ம் தேதி காமராஜர் மக்கள் கட்சியை இணைக்கிறோம்.
இதன் வாயிலாக, 'த.மா.கா., தான் பண வலிமை படைத்த கட்சி'ன்னு சொல்ல வர்றாரோ? திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட ஜெ., பேரவை இணை செயலர் ஜெயகுமார் பேச்சு: அ.தி.மு.க., ஆட்சியில், அரசு மேல்நிலை பள்ளி மாணவ - மாணவியருக்கு இலவச, 'லேப்டாப்' மற்றும் ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. தி.மு.க., ஆட்சியில் இந்த திட்டங்களை நிறுத்தியதால், மாணவர்களிடம் படிக்கும் ஆர்வம் குறைந்தது. இளம்பெண்கள், முதிர் கன்னியராக மாறும் நிலை ஏற்பட்டது. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் வகையில் கல்லுாரி மாணவர்கள், இளம்பெண்கள் ஓட்டுகள் ஒட்டுமொத்தமாக கிடைக்கும். கல்லுாரி மாணவர்கள், இளம்பெண்கள் ஓட்டுகளை நடிகர் விஜய் கட்சி கொத்திட்டு போயிடாம பார்த்துக்குங்க! தி.மு.க., மாணவரணி மாநில செயலர் ராஜிவ்காந்தி பேச்சு: நம் அணிக்கு, 1 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, சென்னையை சேர்ந்த கல்லுாரி மாணவ - மாணவியர் 500 பேர், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்துள்ளனர். தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்துள்ள, 'நான் முதல்வன்' திட்டம், உயர்கல்விக்கான வழிகாட்டுதல் ஆகிய திட்டங்கள், மாணவ - மாணவியர் தி.மு.க.,வில் சேர வழி வகுத்துள்ளது. மாணவ - மாணவியரை தி.மு.க.,வில் சேர்க்கணும் என்றே, இந்த திட்டங்களை அமல்படுத்தியிருப்பாங்களோ? தமிழக பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை: தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 181வது வாக்குறுதியாக, 'பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்' என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று வரை அதை நிறைவேற்றவில்லை. தற்போது வழங்கப்படும், 12,500 ரூபாய் என்ற குறைந்த சம்பளத்தால், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 12,000 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவங்களை நிரந்தரம் செய்யலை என்றால், இந்த 12,000 பேர் மற்றும் அவங்க குடும்பத்தினர் ஓட்டுகள் தி.மு.க.,வுக்கு கிடைப்பது சந்தேகம் தான்!