பேச்சு, பேட்டி, அறிக்கை
தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் வழிநடத்தும் தமிழகம், மாநிலங்களின் ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதத்தில் முதலிடம்; ஒட்டுமொத்த உற்பத்தியில் இரண்டாம் இடம் என்ற உச்சத்தை எட்டி பிடித்துள்ளது. இதற்கு, இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளி விபர தகவல்கள் புகழாரம் சூட்டியுள்ளன. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழகம் ஒளிர்கிறது. கடந்த, 2004 லோக்சபா தேர்தலப்ப, பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான, மத்திய பா.ஜ., அரசும், 'இந்தியா ஒளிர்கிறது'ன்னு தான் ஏகத்துக்கும் பெருமை அடிச்சது... ஆனா, அந்த தேர்தல்ல, பா.ஜ., அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க... அந்த கதை, தமிழகத்திலும் நடந்துடாம பார்த்துக்குங்க!தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை: 'எங்க கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களே' என இறுமாப்பு அரசியல் பேசுகிறார், முதல்வர் ஸ்டாலின். மக்கள் விரோத, பிரிவினைவாத ஊழல் அரசுகளை தொடர்ந்து வீழ்த்தி, ஒவ்வொரு மாநிலங்களிலும், பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசை அமைத்து வரும் பா.ஜ.,வின் நேர்மையான கேரக்டரை, 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., அரசை தமிழக மக்கள் விரட்டி அடிக்கும்போது ஸ்டாலின் புரிந்து கொள்வார். நம்ம பக்கத்து மாநிலமான கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியை, பா.ஜ., கைப்பற்றிய உற்சாகம், 2026ல் தமிழகத்திலும் எதிரொலிக்கும்னு இவர் நினைக்கிறாரோ? அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியர் சிலர், வகுப்பறையில் மது அருந்தும் வீடியோ காட்சியை பார்த்தால், மனம் பதறுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், போதையின் பிடிக்கு பள்ளி மாண வ - மாணவியர் அதிகமாக அடிமையாகி உள்ளனர். இது, தி.மு.க., ஆட்சியின் அவல நிலையை காட்டுகிறது. போதைக்கு எதிராக நடை பயணம் துவங்க இருக்கும், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தான், இதை எல்லாம் தட்டிக் கேட்கணும்! அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: 'அரசு பஸ்களில், பெண்களுக்கு இலவச பயண திட்டம் வாயிலாக, மாதம், 888 ரூபாய் அவர்களால் சேமிக்க முடிகிறது' என, தி.மு.க., அரசு பெருமைப்பட்டு கொள்கிறது. அதே சமயம், 'டாஸ்மாக்' மது பிரியர்களால், மாதந்தோறும் அக்குடும்பம் இழக்கும் தொகையையும் அரசு கணக்கிட்டு சொன்னால், நன்றாக இருக்கும். இலவச பஸ் பயணத்தால், பெண்கள் ஒரு மாதத்தில் சேமிக்கும், 888 ரூபாயை, அவங்க வீட்டு ஆண்கள் இரண்டே நாட்களில் மது குடித்து, அரசுக்கு திருப்பி குடுத்துடுவாங்க!