உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

முன்னாள் எம்.எல்.ஏ.,வும், இந்திய குடியரசு கட்சியின் தலைவருமான செ.கு.தமிழரசன் பேட்டி:

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே கொண்டாபுரம் அரசு உயர்நிலை பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வந்த மோகித் என்ற மாணவர், பள்ளியில் சுவர் சரிந்து விழுந்ததில் உயிரிழந்தார். இப்படி மாணவர்களின் உயிரை பறிக்கும் நிலையில், பள்ளிகளின் கட்டமைப்பை வைத்திருக்கும் தி.மு.க., அரசு, கொஞ்சம் கூட வெட்கமின்றி, 'திராவிட மாடல் அரசு, கல்வியில் சிறந்த மாநிலம்' என, சொல்வது வெட்கக்கேடானது. தங்களை பத்தி தற்பெருமை அடிச்சுக்க, யாராவது வெட்கப்படுவாங்களா?

முன்னாள் எம்.பி.,யும், அகில இந்திய காங்., செயலருமான விஸ்வநாதன் பேச்சு:

'கிராமங்கள் தான் இந்தியாவின் ஆன்மா' என்றார், மஹாத்மா காந்தி. அதனால் தான், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா வழிகாட்டுதலில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் உருவாக்கப் பட்டது. இத்திட்டம், கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்தது. தற்போது, மத்திய அரசு இத்திட்டத்தை செயலிழக்க வைத்து விட்டது; வாழ்க ஜனநாயகம். இந்த திட்டத்தின் வேலை நாட்களை, 100ல் இருந்து, 125 ஆக உயர்த்தியது, இவரது கவனத்துக்கு வரலையா?

தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:

சென்னையில், தொழுநோய் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, தொழிற்சாலைகள் மற்றும் புலம் பெயர்ந்த மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே, இந்த பாதிப்பு அதிகம் உள்ளதாக சொல்லப்படுவது, கவலை அளிக்கிறது. இந்நோய் தொற்றை கட்டுப்படுத்த, தமிழக சுகாதாரத் துறை விரைவான, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி ஒரு பிரச்னை இருக்கு என்பதாவது, நமது சுகாதாரத் துறை அமைச்சருக்கு தெரியுமா?

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலர் வினோஜ் பேச்சு:

எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, அவரை சாமானிய தொண்டர்களும் எளிதில் சந்தித்து பேச முடியும். அவரை போலவே அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும், முதல்வராக இருந்த போதும் சரி, தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிற போதும் சரி, பொதுமக்களும், கட்சி தொண்டர்களும், எந்த நேரத்திலும் சந்தித்து பேசக்கூடிய அளவிற்கு மிக எளிமையாக இருக்கிறார். சட்டசபை தேர்தலில் போட்டியிட, விருப்ப மனு போட்டிருப்பார் போல தெரியுது... அதான், 'எம்.ஜி.ஆர்., மாதிரி பழனிசாமி இருக்கார்'னு, பாராட்டு பத்திரம் வாசிக்கிறாரு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
டிச 20, 2025 19:04

எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, அவரை சாமானிய தொண்டர்களும் எளிதில் சந்தித்து பேச முடியும். நல்ல ஜோக். மந்திரிகளே லேசில் சந்திக்க முடியாதுதென்பதே உண்மையாகும்.


சமீபத்திய செய்தி