பேச்சு, பேட்டி, அறிக்கை
தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை: நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து, திருப்பரங்குன்றம் முருக பக்தர்கள், ஆன்மிக அன்பர்கள், திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற, சட்டப்படி உரிமை போராட்டம் நடத்துகின்றனர். ஆனால், ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதி, தமிழ் கடவுள் முருகனை அவமதிக்கும் வகையில், உதாரணப்படுத்தி கூறிய மோசமான கீழ்த்தரமான கருத்துகளுக்கு, துறை அமைச்சர் சேகர்பாபு, தார்மீக பொறுப்பேற்று, தமி ழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். வழக்கமா, 'பதவி விலகணும்'னு தானே கேட்பாரு... இன்னும் நாலு மாசம் இருக்கிற பதவி என்பதால், 'மன்னிப்பு மட்டும் போதும்'னு தாராளம் காட்டுறாரோ? இந்திய கம்யூ., கட்சி மாநில செயலர் வீரபாண்டியன் பேட்டி: நாங்கள், மக்களுக்காக களத்தில் நிற்கிறோம். நடிகர் விஜய், ஜனநாயகத்திற்காக இப்போது தான் குரல் கொடுக்கிறார்; இன்னும் அதிகமாக குரல் கொடுக்க வேண்டும். இந்தியாவில் பெரிய பெரிய மனிதர்களை இந்த ஜனநாயகம் பார்த்துள்ளது. இன்னும் ஆயிரம் கட்சிகள் வந்தாலும், ஜனநாயகம் சந்திக்கும். பிரச்னை என்பது விஜயா, சீமானா என்பது அல்ல; கொள்கைதான். எதுவும் புரியலையே... சமீபத்தில், நடிகர் கமலை பார்த்துட்டு வந்திருப்பாரோ? அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: விபத்தில் சிக்கி, கையை இழந்த பீஹார் தொழிலாளிக்கு, சிறப்பான அறுவை சிகிச்சையால் கையை மீண்டும் பொருத்தி, மறுவாழ்வு கொடுத்த, சென்னை அரசு மருத்துவமனை மருத்துவர்களை துணை முதல்வர் உதயநிதி, நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், பீஹாரில் அரசு மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட, தமிழக அரசு மருத்து வர்களுக்கு, 40,000 முதல் 50,000 ரூபாய் வரை குறைவாக ஊதியம் தரப்படுகிறது என்பதை, துணை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறோம். அப்படி என்றால், பீஹாரிலேயே போய் வேலை செய்யுங்க'ன்னு சொல்லிட போறாரு! தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., வில்சன் பேச்சு: வாழ்க்கை செலவு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டது; பொருளாதார சூழ்நிலைகளும் நிறைய மாறிவிட்டன. இருப்பினும், ஓ.பி.சி., எனும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர், இடஒதுக்கீடு பெறுவதற்கான வருமான உச்சவரம்பு, ஆண்டுக்கு, 8 லட்சம் ரூபாய் என்ற அளவிலேயே கடந்த எட்டு ஆண்டுகளாக நீடிக்கிறது. இந்த உச்சவரம்பை மத்திய அரசு உயர்த்த வேண்டும். பொருளாதாரத்தில் நலிந்த, வகுப்பினருக்கு மத்திய அரசு, 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதே... அதை, தமிழக அரசு முறையாக செயல்படுத்துகிறதா?