தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் பேச்சு:கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், தி.மு.க., அளித்த வாக்குறுதிகளில், 90 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றி, மக்களின் பேரன்பை முதல்வர் ஸ்டாலின் பெற்றுள்ளார். சொன்னதை செய்யும் அரசு, நம் அரசு. இலவச பஸ் பயணம் வாயிலாக, ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக வேலைக்கு செல்கின்றனர்; ஆண்கள் நிம்மதியாக உள்ளனர். வாஸ்தவம் தான்... பெண்கள் வேலைக்கு போய் சம்பாதிக்கும் பணத்தை பிடுங்கி, 'டாஸ்மாக்' மதுபான கடைகளில் ஆண்கள் அழிச்சிடுறாங்களே!ஹிந்து தமிழர் கட்சி தலைவர், ராம ரவிகுமார் அறிக்கை: திண்டுக்கல் மாவட்டம், கீழக்கோட்டை கிராமத்தில் மாரியம்மன், பகவதி அம்மன் கோவில்களுக்கு சொந்தமான, 10 ஏக்கர், 38 சென்ட் நிலத்தை, தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி, அவரது மகன் செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் ஆதரவுடன், அப்பகுதி தி.மு.க., நிர்வாகிகள் இணைந்து, 'ஐ.பி.எஸ்., சுற்றுலா வேன், கார் ஓட்டுநர் உரிமையாளர் சங்கம்' என்ற பெயர் பலகை வைத்து ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றி, இடத்தை மீட்க வேண்டும். ஆளுங்கட்சியினர் ஆக்கிர மித்த இடத்தை மீட்க, எந்த அதிகாரிகளுக்கு துணிச்சல் வரும்? தமிழக கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி பேட்டி: 'ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறுகிறார். ஆனால், 'பன்னீர்செல்வம், தினகரனை சேர்த்துக் கொள்கிறேன்' என்று சொல்லி இருக்கிறாரா? இதில் இருந்தே, அவர்களுக்குள் ஒருமித்த கருத்து இல்லை என்பது தெரிகிறது. 'பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம்'னு சொல்ற பன்னீர்செல்வம், தினகரனை எப்படி அ.தி.மு.க.,வில் சேர்த்துக்குவாங்க? பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழகத்தில், 2024 - 25ம் ஆண்டில், வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டு உள்ள மின்சாரத்தில், வெறும், 16 சதவீதம் மட்டுமே மின் வாரியத்தால் சொந்தமாக, உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள மின்சாரம் வெளியில் விலைக்கு வாங்கப்பட்டு இருப்பதாகவும், மின் வாரியம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மின் தேவையில், ஆறில் ஒரு பங்கு மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்யும் அளவுக்கு வாரியத்தை, தி.மு.க., ஆட்சியாளர்கள் சிதைத்து வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த மின்சார கொள்முதலில், எத்தனை சதவீதம் கமிஷன், யார் யாருக்கு போனதோ?