பேச்சு, பேட்டி, அறிக்கை
வேலுார், தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்த் பேச்சு: தமிழக மக்கள் எல்லாரும் ஒட்டுமொத்தமாக, பிரதமர் மோடியை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். இன்னும், 100 நாட்களில், 100 நாள் வேலை திட்டம் அழியப்போகிறது. அதை தடுக்க, தமிழகத்தில் உள்ள ஒரே ஆண் மகன் முதல்வர் ஸ்டாலின் தான். நம் வாழ்வாதாரத்தை அழிக்கக்கூடிய மோடி அரசுக்கு நாம் சாவு மணி அடிக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை, தமிழக அரசு தலை கொடுத்தாவது காப்பாற்றும். தமிழக அரசு தலையை எல்லாம் தர வேண்டாம்... இந்த 125 நாள் வேலை திட்டத்திற்கு, மத்திய அரசு தரும் 60 சதவீதம் நிதியுடன், 40 சதவீதம் நிதியை ஒதுக்கினா மட்டும் போதும்!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி: 'வரும் ஜனவரி 20ம் தேதி, கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் துவங்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளனர். தி.மு.க., அரசால் இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும். தேர்தல் முடிந்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி முதல்வராக பதவியேற்றதும், முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இவ்வளவு நம்பிக்கையா இருக்காரே... ஒருவேளை, அ.தி.மு.க., தரப்புல இப்பவே பட்ஜெட் உரையை தயாரிக்க துவங்கிட்டாங்களோ? தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேச்சு: விஜய்க்கு கூடும் கூட்டத்தை பார்த்து, தேர்தலில் நிற்கலாமா, வேண்டாமா என்று பலரும் அச்சப்படுகின்றனர்.தமிழகத்தில், எந்த சக்தியாலும் த.வெ.க.,வை வெல்ல முடியாது. எம்.ஜி.ஆர்., - ஜெ.,க்கு பிறகு, தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற விஜய் வந்திருக்கிறார். 2026 சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும், த.வெ.க., வெற்றி வாகை சூடும். அவ்வளவு பெரிய ஆளுங்கட்சியான தி.மு.க.,வினரே, '200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்'னு தான் அடக்கி வாசிக்கிறாங்க... இவரோ, '234லும் வெற்றி'ன்னு இறங்கி அடிக்கிறாரே! தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி: 'அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று அழைக்கலாம்' என, ஒரு பழமொழி உண்டு. பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவை, சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற்று வரச் சொல்லுங்கள் பார்க்கலாம். முதல்வர் ஸ்டாலின், சாதாரண தொண்டனை அவருக்கு எதிராக நிற்க வைத்து, எளிதில் வெற்றி பெற வைப்பார். அரசியல் செல்வாக்கு இழந்த ராஜாவை, அவரது கட்சியே கண்டுகொள்வதில்லை என்பது தான் உண்மை.சாதாரண தொண்டரா... தி.மு.க.,வுலயா... அட்ரா சக்கை! நிற்க வச்சிடட்டுமே... பாத்துருவோம்!