பேச்சு, பேட்டி, அறிக்கை
தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: இழுத்து செல்லப்படும் பெட்டிகள் அனேகம் இருக்கலாம். ஆனால், வழி நடத்தி செல்லும் இன்ஜின் ஒன்று மட்டுமே என்பதில் உறுதியாக இருப்பது தமிழகம். அது ஒருபோதும் மிக்சர் ஆட்சிகளை ஊக்குவிப்பது கிடையாது. அதனால், பட்டு வேட்டி குறித்த கனவில் ஆழ்ந்து, கட்டியிருக்கும் கோவணத்தையும் பறிகொடுக்காமல் பார்த்துக் கொள்வது, உரியவர்களுக்கு உத்தமமாகும். தி.மு.க.,விடம் ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரசாரை, இவ்வளவு கேவலமா யாராலும் திட்ட முடியாது! தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்ற நபருக்கு துணையாக இருந்த, அவரது, 15 வயது சகோதரிக்கு, பாலியல் தொல்லை அளித்ததாக, அம்மருத்துவமனையில் பணியாற்றி வரும் கோபிநாத் என்ற டாக்டர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இவர் ஏற்கனவே, கடந்த ஆண்டு, அதே மருத்துவமனையில் செவிலியர் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் பணி அமர்த்தப்பட்டுள்ளார். இந்த முறையாவது, சட்டத்தின் பிடியில் இருந்து அவர் தப்பிக்காத வகையில், இந்த வழக்கை கையாள வேண்டும். முதல் வழக்கிலேயே, அவரை தண்டிச்சிருந்தால், அடுத்து தப்பு செய்ய துணிஞ்சிருப்பாரா? இந்திய கம்யூ., கட்சியின் மாநில செயலர் வீரபாண்டியன் அறிக்கை: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடிஷா, வங்காளம், மராத்தி ஆகிய ஏழு மொழிகளில் வெளியாகும் படைப்புகளுக்கு செம்மொழி இலக்கிய விருது, 5 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கி, படைப்பாளர்களை ஊக்கப்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற் கிறோம். ஆளும் தி.மு.க., அரசு எது செய்தாலும், வரவேற்பு பத்திரம் வாசிக்கிறதே இவருக்கு வாடிக்கையா போயிடுச்சு! தமிழக கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி பேட்டி: புதிதாக எதையும் வாக்குறுதியாக தர இயலாத பரிதாப நிலைக்கு போய்விட்ட அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தி.மு.க., வெற்றிகரமாக நிறைவேற்றிய திட்டங்களையே, 'காப்பி' அடித்து அறிவித்திருக்கிறார். தி.மு.க., மாடல் ஆட்சியின் திட்டங்களையே, அ.தி.மு.க., வாக்குறுதிகளாக அறிவித்திருப்பது மீண்டும், தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சியை தொடரும் என்பதை காட்டுகிறது. 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற கோட்பாட்டை அடித்தளமாக கொண்டு, தி.மு.க., ஆட்சி செயல் படுகிறது. 'எல்லாருக்கும் எல்லாம்' என்றால், கட்சியிலும், ஆட்சியிலும் உதயநிதிக்கு கிடைக்கும் மதிப்பும், மரியாதையும் இவருக்கும் கிடைக்கிறதா?