உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு: இன்றைய நிதி நிலையில், த.வெ.க., அறிவித்த திட்டங்களை செய்ய முடியும் என்பதற்கு, ஒரு சதவீத அறிகுறி கூட கிடையாது. விஜய், 'மாஸ்' நடிகர். அவரது திரைப்படத்தை குடும்பத்தோடு சென்று பார்க்கலாம். ரஜினி போல நகைச்சுவையும் செய்யக்கூடியவர். அதையெல்லாம் பார்த்து, அதேபோல் வாழ்க்கையிலும், ஆட்சியிலும் நடந்து கொள்வார் என்ற நம்பிக்கையோடு மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். அந்த எண்ணங்கள் நிச்சயமாக பொய்யாகி விடும். எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா போன்ற திரை நட்சத்திரங்கள் ஆட்சிக்கு வந்ததை ஏத்துக்கிட்ட இவர், விஜயை மட்டும் ஏத்துக்க மாட்டேன்னு சொல்வது எந்த வகையில் நியாயம்?அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி: திண்டுக்கல் மாவட்டத்தில், 100 சதவீத கட்சியினர், பொதுக்குழு உறுப்பினர்கள், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆதரவாளர்கள் தான். 'மெஜாரிட்டி' கட்சியினர் எங்களுடன் வந்து விட்டனர். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீண்டும் எங்களுடன் இணைந்து பணிபுரிவாரா என்பதை, அவரிடம் தான் கேட்க வேண்டும். மாவட்ட அரசியலில் இவருக்கு குடைச்சல் கொடுத்துட்டு இருந்த நத்தம் விஸ்வநாதன், வேலுமணி அணிக்கு போயிட்டதுல இவர் சந்தோஷமா இருப்பாரே! திருச்சி ம.தி.மு.க., - எம்.பி., துரை வைகோ பேச்சு: தற்போதுள்ள பொருளாதார சூழலில், பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் விஜய், 'அவற்றை நிறைவேற்ற கால அவகாசம் தேவை' என்று கூறி இருக்கிறார். எனவே, ஆறு மாதங்களுக்கு பின் தான் அவரது செயல்பாடுகள் குறித்து கூற முடியும். 'விஜய் முதல்வரானதற்கு 100 சதவீதம் சினிமா தான் காரணம்' என்று கூறியது ரஜினிகாந்தின் கருத்து. தேர்தலில் ஓட்டு போட்ட மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும். சினிமா தான் காரணம் என்று கூறி சிறுமைப்படுத்தக் கூடாது. தி.மு.க.,வினர் எல்லாம் விஜய் வெற்றியை விமர்சனம் பண்ணிட்டு இருக்கிற சூழல்ல, அந்த கூட்டணியில் இருந்தபடியே விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கிறாரே... அடுத்த தேர்தலில், த.வெ.க., அணிக்கு தாவும் ஐடியா இருக்குமோ? ஜெயங்கொண்டம் தொகுதி பா.ம.க., - எம்.எல்.ஏ., வைத்திலிங்கம் பேட்டி: ஜெயங்கொண்டம் தொகுதி மக்களின் கோரிக்கைகளான குடிநீர், சாலை, பொது கழிப்பறை, மயான பாதை, தனி நபருக்கு வீட்டுமனை, வீடற்றவர்களுக்கு வீடு கட்டி கொடுப்பது போன்ற அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, அதை நிறைவேற்றுவதற்கு சட்டசபையில் போராடுவேன். திராவிட கட்சிகளின் 59 ஆண்டுகால ஆட்சியில், இந்த அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காம என்னதான் பண்ணிட்டு இருந்தாங்க?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Lakshminarasimhan
மே 20, 2026 09:42

எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை எப்படி இடப்படியாரோடு ஒப்பிட முடியாதோ அதை போன்று தான் விஜய் இவர்களுக்கு ஈடு ஆக முடியாது எனவே விஜய் நிறைய கத்துக்கோனும் இல்லை என்றால் அவர் ஆட்சி அம்போ தான்