வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ராஜேஸ்வரி பிரியா அவர்கள் நல்லதொரு அரசியல்வாதி .... தமிழகத்தின் துரதிருஷ்டம் இவரைப் போன்றவர்கள் மக்களால் ஆதரிக்கப்படுவதில்லை ....
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:'விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம்' எனக் கூறியுள்ள தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, விவசாயம் குறித்த தகவல்களை, விவசாயிகளிடம் கேட்டோ அல்லது படித்தோ தெரிந்து கொள்ள வேண்டும். தன்னை நம்பி விளையாடுவது, விளையாட்டு. ஆனால், விவசாயமோ இயற்கையை நம்பி, அனைவரின் வயிற்று பசியை போக்குவதற்காக, மேற்கொள்ளப்படுவது. ஓராண்டில் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது அமைச்சருக்கு தெரியுமா? எதை, எதோடு ஒப்பிடுவது என்று புரிந்து கொண்டு, அமைச்சர் பேச வேண்டும். அது சரி... விட்டால், 'டாஸ்மாக்'கில் மது வாங்கி குடிக்கிறவங்களை, 'தன் உயிரையே பணயம் வச்சு, அரசுக்கு வருமானம் ஈட்டி தர்றாங்க'ன்னு கூட ஆதவ் அர்ஜுனா சொல்வாரோ?அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு: இவ்வளவு பெரிய, 'சுனாமி' அலையிலும், தமிழகத்தில் உள்ள அனைத்து குக்கிராமங்களிலும், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டுகள் விழுந்துள்ளன. எனவே, நம் கட்சியினர் தடுமாறி படுகுழியில் விழுந்து விடாதீர்கள். என்றைக்கும் தமிழகத்தை துாக்கி நிறுத்தும் கட்சி அ.தி.மு.க., தான். ஓட்டை விழுந்த கப்பல்ல இருந்தபடி, 'கண்டிப்பா கரையேறுவோம்'னு சொல்ற இவரது கருத்தை, அ.தி.மு.க., தொண்டர்கள் ஏத்துக்குவாங்களா? பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, 'கேம்பெட்' என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தது, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை சாதாரண நிர்வாக குறைபாடாக கருதாமல், மாணவர்களின் கல்வி உரிமையுடன் தொடர்புடைய முக்கிய பிரச்னையாக அணுக வேண்டும். விடைத்தாள் திருத்தும் பணியில், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். சி.பி.எஸ்.இ., தலைமை பொறுப்பில் இருந்த அதிகாரிகளை மாத்தியிருக்காங்களே... இனி யாவது, குளறுபடிகள் சரியாகும்னு நம்புவோம்! நடிகரும், சினிமா தயாரிப்பாளருமான ஜெ.எம்.பஷீர் அறிக்கை: தமிழக அரசியல் வரலாற்றில், முதன் முறையாக கூட்டணி ஆட்சி அமைத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஆட்சியில் பங்கு வழங்கியுள்ளார் முதல்வர் விஜய். 'சிறுபான்மையின மக்களின் பாதுகாவலன்' என்று இதுவரை மக்களை ஏமாற்றி வந்தவர்களின் போலி முகத்திரையை கிழித்துள்ளார். சிறுபான்மையினர் இனி, விஜய் பின்னால் என்றென்றும் அணிவகுப்போம். 'சிறுபான்மையினர் ஓட்டுகள் இனி கொத்து கொத்தாக, தி.மு.க.,வுக்கு விழாது'ன்னு சொல்றாரோ?
ராஜேஸ்வரி பிரியா அவர்கள் நல்லதொரு அரசியல்வாதி .... தமிழகத்தின் துரதிருஷ்டம் இவரைப் போன்றவர்கள் மக்களால் ஆதரிக்கப்படுவதில்லை ....