பேச்சு, பேட்டி, அறிக்கை
தி.மு.க., விவசாய அணி மாநில செயலரும், முன்னாள் எம்.பி.,யுமான ஏ.கே.எஸ்.விஜயன் அறிக்கை: தமிழக வெற்றிக் கழக அரசு, தன் ஆட்சி கவிழ்ந்துவிடக் கூடாது என்ற பயத்தில், கர்நாடகாவின் மேகதாதுவில் அணை கட்ட எல்லா முயற்சிகளும் எடுக்கும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக, வாய் திறக்கவே பயப்படு கிறது. இவங்க ஆட்சியில் இருந்தப்ப மட்டும், மேகதாது அணைக்கு எதிராக வாளை சுழற்றினாங்களா என்ன?தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி அறிக்கை: சென்னை ஆலந்துாரில் பெண் ஒருவர், த.வெ.க., நிர்வாகியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. சில தினங்களுக்கு முன், துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில், த.வெ.க., - எம்.எல்.ஏ., சரவணன் உள்ளிட்ட கட்சியினர், பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற பார்க்கின்றனர் என்ற செய்தி வெளியானது. சினிமா பாணியில் பெயரிட்ட சிறப்பு படையை சமீபத்தில் துவக்கி வைத்து, தனிமனித ஒழுக்கம் குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை கூறிய முதல்வர் விஜய், தன் கட்சியினருக்கு அதை சொல்ல வேண்டும். எல்லா கட்சிகளிலும் சில ஒழுங் கீனர்கள் இருக்க தான் செய்வாங்க... 'தி.மு.க.,வில் அப்படி யாரும் இல்ல'ன்னு இவங்களால உத்தரவாதம் தர முடியுமா? ம.தி.மு.க., அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜுன ராஜ் பேச்சு: தி.மு.க., நமக்கு நல்லது செய்வது போல தீங்கு செய்துள்ளது. ம.தி.மு.க.,வை அழிக்க நினைக்கும் தி.மு.க.,வுடன் இருக்கக் கூடாது என்பதே நம் கட்சியினர் கருத்தாக உள்ளது. பாம்புக்கு பால் வார்த்தாலும், நஞ்சைத்தான் கொடுக்கும். அதுபோல, நச்சு பாம்பான தி.மு.க.,வுடன் இனியும் இருக்கக் கூடாது. ம.தி.மு.க.,வை தி.மு.க., அழிக்க பார்க்கிறதா சொல்றாரே... அழிக்கும் அளவுக்கு அங்க ஏதும் மிஞ்சியிருக்குதா என்ன? த.மா.கா., பொதுச்செயலரும், திரைப்பட தணிக்கை குழு முன்னாள் உறுப்பினருமான எம்.பி.நாதன் பேச்சு: நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி தந்த மகாத்மா காந்தி வீட்டில் என்ன நடந்தது தெரியுமா? அவரது சொந்த மகன் மது பிரியராக வாழ்ந்து, சாலையோர குப்பை தொட்டியில் இறந்து கிடந்தார். எவ்வளவு பெரிய மகாத்மாவாக இருந்தாலும், தன் கடமையில் இருந்து தவறுவது என்பது, வாழ்க்கை எனும் கப்பலை மூழ்கடிக்கும் பாவத்திற்கு சமம். எனவே, அரசியல் தலைவர்கள் தொண்டர்களை வாழ வைக்க, தங்களின் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்த கால அரசியல் தலைவர்கள், தாங்கள் சொகுசாக வாழ மட்டுமே தொண்டர்களை பயன்படுத்திக்கிறாங்களே தவிர, அவர்களை கைதுாக்கிவிட எதுவும் செய்வதில்லை!