பேச்சு, பேட்டி, அறிக்கை
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர்தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., பேட்டி:தி.மு.க.,வை தனிமைப்படுத்த, 'தி.மு.க., - பா.ஜ., கூட்டணி' என்ற கருத்து டில்லியில் இருந்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது. அது வெறும் வதந்திதான். தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு எந்த முகாந்திரமும் இல்லை. பா.ஜ.,வின் நிழல் பக்கம் கூடசெல்லக்கூடாது என்பதில், தி.மு.க.,வினர் உறுதியாக இருக்கின்றனர். இதை நீங்கதான் சொல்றீங்க... தி.மு.க., வினரிடம் இருந்து அப்படி எந்த கருத்தும் வந்த மாதிரி தெரியலையே!தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் நாகராஜ் பேச்சு: தமிழக அறநிலைய துறை அமைச்சர் ரமேஷ், முதல்வருக்கு மாதா சிலை வழங்கியதுடன், கடவுள் மறுப்பாளர் ஈ.வெ.ரா., புத்தகத்தையும் பரிசளித்திருக்கிறார். தான் அமைச்சராக இருக்கும் அறநிலைய துறையில் முழு ஈடுபாடு கொண்டவராக இருக்க வேண்டியவர், கடவுள் சிலைகளை அவமதித்தவர் எழுதிய புத்தகத்தை முதல்வருக்கு வழங்கியது ஏற்புடையதல்ல.அவர் குடுத்துட்டார் என்பதால, அதை எல்லாம் முதல்வர் படிச்சிட்டு, அதில் உள்ள விஷயங்களை கடைப்பிடிக்க போறதில்லையே! மா.கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் பேட்டி: மருத்துவ துறையில் தமிழகம் முன்னணி மாநில மாக திகழ்கிறது. இதற்கு டாக்டர்களின் தொண்டுள்ளமும், அர்ப்பணிப்பு உணர்வும், சேவையுமே முக்கிய காரணம். பணிச்சுமை காரணங்களால், தமிழக டாக்டர்கள் பெரும் மன அழுத்தத்தில் உள்ளனர். ஊதிய உயர்வு கேட்டு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக டாக்டர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை த.வெ.க., அரசு நிறைவேற்ற வேண்டும்.தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியதில், அரசு டாக்டர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஓட்டுகளுக்கும் முக்கிய பங்குண்டு என்பதால், டாக்டர்கள் கோரிக்கையை த.வெ.க., அரசு பரிசீலிக்கும்! திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா அறிக்கை: அரசு புறம்போக்கு நிலங்களில் இருக்கும் சீமை கருவேலம் மரங்களை, ஜே.சி.பி., இயந்திரங்கள் வாயிலாக சிலர் அப்புறப்படுத்துகின்றனர். 'காஸ்' தட்டுப்பாட்டால், மாற்று எரிபொருளாக அந்த மரங்கள் விறகிற்கு பயன்படுகின்றன. புகை குறைவாகவும், எரியும் தன்மை அதிகமும் கொண்டவை. வணிக ரீதியாக பணம் ஈட்டும் பொருளாதாரமாகவும் இருக்கின்றன. எனவே, வெட்டப்பட்ட மரங்களை வருவாய் துறை ஏலம் விட்டு, அந்த பணத்தை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும். இந்த மரங்களை எல்லாம் வெட்டுறது இவரது முன்னாள் தலைவர் வைகோ என்பதால், அதற்கு எதிராக கருத்து சொல்றாரு என்பது நல்லாவே தெரியுது!