உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு:

தி.மு.க., நல்லாட்சி தரவில்லை; நல்ல திட்டங்களை தரவில்லை. அவர்களுக்கு எதிராக மக்கள் இருந்ததால், அ.தி.மு.க., வென்று ஆட்சியை பிடிக்கும் என நினைத்தோம். ஆனால், மொபைல் போனில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என பார்த்து, இளம் வயதினர் போட்ட ஓட்டுகளால், நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க., ஆட்சிக்கு வந்து விட்டது. தி.மு.க., ஆட்சியைவிட மோசமான ஆட்சியை தருவதால், விரைவில் இவர்கள் வீட்டுக்கு செல்வர். அப்படியே அவங்க வீட்டுக்கு போனாலும், ஆளும் கட்சி அந்தஸ்துக்கு தி.மு.க., வருமா; நீங்க வருவீங்களா என்ற சந்தேகம் வருதே!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்வராஜ் பேச்சு:

பணம் படைத்தவர்கள், கோடிகளில் சொத்து சேர்த்தவர்கள், வழக்குகளில் தப்பிக்க நினைத்த இரண்டாம் கட்ட தலைவர்கள் தான், அ.தி.மு.க.,வில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்துக்கு சென்றுள்ளனர்; தொண்டர்கள் யாரும் செல்லவில்லை. இதுபோன்ற இரண்டாம் கட் ட தலைவர்களை, தொண்டர்கள் தான் உருவாக்குவர். செங்கோட்டையன், விஜயபாஸ்கர் சென்றதால், அ.தி.மு.க., பலவீனமாகாது. ஒரு காலத்தில் எஸ்.டி.சோமசுந்தரம், அரங்கநாயகம், திருநாவுக்கரசு என பலர் சென்றபோதும், அ.தி.மு.க., மீண்டு வந்தது. 'நம்பிக்கை தான் வாழ்க்கை'ன்னு சொல்லுவாங்க... இவரது நம்பிக்கை பலிக்க நாமும் வாழ்த்துவோம்!

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க., இளைஞர் அணி செயலருமான உதயநிதி பேட்டி:

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மின்வெட்டு; திரும்பும் இடமெல்லாம் பாலியல் வன்கொடுமை. அரசு வழக்கறிஞர் நியமனத்தில் கூட லஞ்சம் பெற்றதாக புகார். அதுவும் நாம் சொல்லவில்லை... த.வெ.க.,வில் உள்ள வழக்கறிஞரே கூறுகிறார். குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் தான் இன்று அமைச்சர்களாக இருக்கின்றனர். இவர்கள் யாரென்று முதல்வருக்கும் தெரியவில்லை; மக்களுக்கும் தெரியவில்லை; எங்களுக்கும் தெரியவில்லை. த.வெ.க., அரசில் பதவிக்கு வந்த யாரும், இவரை போல வாரிசு அந்தஸ்தில் அந்த இடத்துக்கு வரலை என்பதே பெரிய ஆறுதல்!

காங்., தமிழக செய்தி தொடர்பாளர் சந்திரசேகரன் பேச்சு:

அ.தி.மு.க., தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டு, அந்த கட்சியில் இருந்து வெளியேறி, எம்.எல்.ஏ., பதவியை துறந்து த.வெ.க.,வில் இணைவதை குதிரை பேரம் என கூறி, சிலர் கூக்குரலிடுகின்றனர். தேர்தல் முடிவின் போது, த.வெ.க., ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியை முதல்வராக்கி, வெளியில் இருந்து ஆதரவு தருவது என்ற ஒரு திட்டத்தை தி.மு.க., வகுத்தது மட்டும் சரியா? அப்படி ஒரு திட்டத்துக்கு பழனிசாமி தலையை ஆட்டியதால் தானே, அ.தி.மு.க., கூடாரமே இன்று காலியாகிட்டு இருக்குது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
ஜூலை 10, 2026 22:40

குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் தவெக அரசில் அமைச்சர்களாக இருக்கின்றனர். இவர்கள் யாரென்று முதல்வருக்கும் தெரியவில்லை மக்களுக்கும் தெரியவில்லை எங்களுக்கும்- திமுகவுக்கும் தெரியவில்லையென்றால் யாருத்தெரியும்.? யார் சொல்லி உதயநிதி பழி சுமத்துகிறார்..?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை