உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா அறிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. இச்செயலில் ஈடுபட்ட ஆசிரியரின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தால் மனவேதனை அடைந்த மாணவி, விஷம் அருந்தி தற்கொலை செய்தது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அந்த ஆசிரியர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து, உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். அந்த ஆசிரியருக்கு வழங்கப்படும் தண்டனை, எதிர்காலத்தில இதுபோன்ற தவறுகளை செய்ய பலரும் பயப்படும் நிலையை ஏற்படுத்தணும்!அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி: ஏற்கனவே அ.தி.மு.க., சார்பில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள், அந்த கட்சிக்கு துரோகம் செய்து விட்டு, பதவியை ராஜினாமா செய்தனர்; பின், ஆளுங்கட்சியில் சேர்ந்து, தற்போது மீண்டும் த.வெ.க., சார்பில் போட்டியிடுகின்றனர். துரோகம் செய்து விட்டு சென்றவர்களுக்கு, மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர். ஒருவேளை, தேர்தலில் அந்த ரெண்டு பேரும் ஜெயிச்சிட்டா, அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு மக்கள் மறுபடியும் பாடம் புகட்டிட்டாங்கன்னு ஏத்துக்குவீங்களா? அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி: த.வெ.க., அரசின் முதல் பட்ஜெட்டில், 1 லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். ஆனாலும், விவசாயிகள் பயிர் கடனை மட்டும் முழுதும் தள்ளுபடி செய்ய முடியவில்லை. இதில், முதல்வர் விஜய்க்கு மனமும் இல்லை. மாறாக, முதல்வர் வீட்டருகே, 1,200 கோடி ரூபாய்க்கு புதிய தலைமை செயலகம் கட்ட இருப்பதாக சொல்வது ஆச்சரியமாக உள்ளது. புதிய தலைமை செயலகத்தை முதல்வர் மட்டுமா அனுபவிக்கப் போறாரு...? தப்பித் தவறி அடுத்த தேர்தல்ல உங்க கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது உபயோகப்படுமே! ம.தி.மு.க.,வைச் சேர்ந்த, திருச்சி எம்.பி., துரை வைகோ பேட்டி: 'மிசா' சட்டத்தில் அரசியல் காரணங்கள் மட்டுமின்றி, பிற காரணங்களுக்காகவும் பலர் கைது செய்யப்பட்டனர். தி.மு.க.,வில் முதல் கைது வைகோ தான்; கடைசி விடுதலையும் வைகோ தான். பழைய செய்தி குறிப்பை பார்க்கும் போது, முன்னாள் முதல்வர் ஸ்டாலின், மிசா காலத்தில் கைது செய்யப்பட்டது உண்மை தான். ஆனால், அரசியல் காரணங்களுக்காகத் தான் அவர் கைது செய்யப்பட்டாரா என்பது கேள்விக்குறி தான். அரசியல் நாகரிகம் கருகி, இந்த விவகாரத்தில் இதற்கு மேல் பேச விரும்பவில்லை. உங்களது கருத்தை பார்த்தால், முதல்வர் விஜயின் குற்றச்சாட்டுகளை 100 சதவீதம் ஆதரிப்பது போல தெரியுதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை