காங்., தமிழக முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி:
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகளை இந்தியாவே நம்பி இருந்தது. ஆனால், அந்த நம்பிக்கையை அவர் தகர்த்து விட்டார். இது மிகப்பெரிய தேசத்துரோக செயல். அவரை போன்ற சுயாட்சிமிக்க ஒரு பொறுப்பில் இருப்பவர்கள், இது போன்ற தவறை செய்யக்கூடாது; வரலாறும் மன்னிக்காது; நாடும் அவரை மன்னிக்காது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அவங்களது கைப்பாவைகளா பல தேர்தல் கமிஷனர்கள் இருந்ததையும், நேரு குடும்பத்தினரின் கண்ணசைவுக்கு ஏற்ப அவங்க காரியமாற்றியதையும் யாரும் மறக்கலை!த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான நடவடிக்கையில், தலைமை தேர்தல் கமிஷனர் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்தது ஏற்புடையதல்ல. காரணம், அரசியலமைப்பு, சட்ட ரீதியான ஜனநாயக அமைப்பு, தேர்தல் கமிஷன் அமைப்பின் மீதுள்ள நம்பிக்கை குறைந்து கொண்டு வருகிறது. இது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல; இவற்றில் நல்ல மாற்றங்கள் தேவை. தேர்தல் கமிஷனர்களின் ஒருமித்த முடிவுகளே, முறையான தேர்தலுக்கு வழிவகுக்கும். அடடா... இதே தே.ஜ., கூட்டணியில் நீடிச்சிருந்தீங்க என்றால், இந்நேரம் தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளை ஆதரிச்சு தானே கருத்து சொல்லியிருப்பீங்க! காங்கிரசைச் சேர்ந்த, சிவகங்கை - எம்.பி., கார்த்தி பேட்டி:
எல்லா அதிகார மையங்களும் சென்னையிலேயே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; அவற்றை பரவலாக்க வேண்டும். சில துறைகளை மதுரை, திருச்சி மற்றும் கோவைக்கு மாற்றலாம். தமிழக சட்டசபை கூட்டத்தை திருச்சியில் நடத்தலாம். அமைச்சரவை ஆலோசனை கூட்டங்களை பல்வேறு மாவட்டங்களில் நடத்த வேண்டும். இந்த யோசனைகளை எல்லாம், கடந்த தி.மு.க., ஆட்சியாளர்களிடம் நீங்க ஏன் சொல்லவில்லை...? நீங்க சொன்னாலும், அவங்க எங்க கேட்கப் போறாங்கன்னு நினைச்சிட்டீங்களோ? இந்திய கம்யூ., தமிழக செயலர் வீரபாண்டியன் அறிக்கை:
சட்டசபையில் 110வது விதியின் கீழ், 'மருந்தியல் பட்டப் படிப்புக்காக 10 புதிய மருந்தியல் கல்லுாரிகள் உருவாக்கப்படும்' என, முதல்வர் விஜய் அறிவித்தார். இந்த புதிய மருந்தியல் கல்லுாரிகளில், தற்காலிக முறையில் ஆசிரியர்களை நியமிக்க உள்ளனர். தற்காலிக முறையில் ஆசிரியர்களை நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும்; நிரந்தர அடிப்படையில் மட்டுமே நியமிக்க வேண்டும். நிரந்தர அடிப்படையில் நியமிக்கணும் என்றால், தமிழக அரசின் நிதி நிலை இடம் தரணும் அல்லவா?