கீரை சாகுபடியில் நிறைவான லாபம்!
இயற்கை விவசாயத்தில் பல வகையான கீரைகளை உற்பத்தி செய்து, பெரிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வரும், திருப்பூர் மாவட்டம், கிளுவன் காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை: இது தான் எங்கள் பூர்வீக கிராமம். என் அப்பா, 2.5 ஏக்கரில் நிலக்கடலை, காய்கறிகள், கீரை வகைகள் சாகுபடி செய்து வந்தார். சிறு வயது முதல் எனக்கும் விவசாயத்தில் ஆர்வம் இருந்ததால், அப்பாவிற்கு உதவி செய்து வந்தேன். ஆனால் அப்பாவிற்கு, நான் வெளியில் வேலைக்கு சென்று வருமானம் ஈட்டணும் என்று ஆசைப்பட்டார். அதனால், பள்ளி படிப்பை முடித்ததும், உறவினர் வாயிலாக வேன் ஓட்ட கற்றுக் கொண்டேன். 'டிராவல்ஸ்' நிறுவனத்தில் வாடகை வேன் ஓட்டுநராக வேலை பார்த்தேன். அதன்பின் நானே சொந்தமாக ஒரு வேன் வாங்கி, ஓட்டிட்டு இருந்தேன். எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு, இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.பல நாட்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன். அதன்பின் வேன் ஓட்ட முடியவில்லை. அதனால், சொந்த நிலத்தில் விவசாயம் செய்ய முடிவெடுத்தேன். முதல் கட்டமாக, 10 சென்ட் நிலத்தில் இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்ய முடிவெடுத்து, உழைக்க ஆரம்பித்தேன். நிறைவான லாபம் கிடைத்ததால், கீரை சாகுபடி பரப்பை படிப்படியாக அதிகரித்தேன்.தற்போது, 1 ஏக்கர் நிலத்தை இரு பகுதிகளாக பிரித்து, ஆண்டு முழுக்க சுழற்சி முறையில், பல வகையான கீரைகள் சாகுபடி செய்து வருகிறேன். இந்திய அளவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் கீரைகள் விற்பனை செய்யக்கூடிய 'மோர், ரிலையன்ஸ்' உள்ளிட்ட பேரங்காடி நிறுவனங்களின் குடோன்கள் எங்கள் பகுதியில் இருக்கின்றன. நான் உற்பத்தி செய்யும் கீரைகளில் பெரும் பகுதியை, இந்த நிறுவனங்களுக்கு தான் விற்பனை செய்கிறேன்.எந்தெந்த கீரைகள் எவ்வளவு தேவைப்படும் என்ற விபரங்களை அறிந்து, ஒரு மாதத்துக்கு முன்பே பயிரிடுவேன். கீரை அறுவடைக்கு தயாரானதும் அவங்களுக்கு தெரிவிப்பேன். தினமும் எந்தெந்த கீரை எவ்வளவு வேண்டும் என்பதை, 'வாட்ஸாப்'பில் எனக்கு தெரிவிப்பர். அந்த ஆர்டருக்கு ஏற்ப மறுநாள் நானும், என் மனைவியும் கீரைகளை அறுவடை செய்து, அவர்கள் குடோனில் கொடுப்போம்.கீரைகளை பொறுத்து விலையை தீர்மானிப்போம். 200 மற்றும் 400 கிராம் கட்டுகளாக விற்பனை செய்வோம். ஒரு கட்டுக்கு குறைந்தபட்சம் 5 முதல் அதிகபட்சம் 15 ரூபாய் வரை கிடைக்கும். ஒரு மாதத்திற்கு எல்லா செலவுகளும் போக, குறைந்தபட்சம் 30,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது. என்னை பொறுத்தவரை இது நிறைவான லாபம்; நிம்மதியான வாழ்க்கை!தொடர்புக்கு 93447 46483