உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / பலா மரங்கள் இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன்!

பலா மரங்கள் இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன்!

தமிழக அரசின் வேளாண்மை துறையில், துணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்று, இயற்கை முறையில் பலா சாகுபடி செய்து வரும், கடலுார் மாவட்டம், பத்திரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஹரிதாஸ்: நாங்கள் விவசாய குடும்பம். எங்களுக்கு 18 ஏக்கர் நிலம் இருக்கிறது. 2010ல் தான் முதன் முறையாக 1.5 ஏக்கரில் 90 பலா கன்றுகள் நடவு செய்தேன். மொத்தம், 150 பலா மரங்கள் உள்ளன. பலா சாகுபடிக்கு அதிக தண்ணீர் தேவைப்படாது; அதிக பராமரிப்பும் தேவையில்லை. நல்ல லாபம் தரக்கூடிய பயிர்.கன்றுகளை நடவு செய்ததில் இருந்து, நான்கு ஆண்டுகள் வரை ஆடு, மாடுகள் கடித்து விடாமல், கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். மூங்கில் கூண்டு அல்லது இரும்பு கூண்டு அமைத்து பாதுகாக்கலாம். ஆண்டுக்கு ஒரு முறை எரு கொடுப்பேன். மாவுப்பூச்சி தாக்குதல் தென்பட்டால், இஞ்சி பூண்டு - பச்சை மிளகாய் கரைசல் தெளிப்பேன்.பலா மரங்கள் நடவு செய்த 4 - 5 ஆண்டு களில் காய்ப்புக்கு வரும். ஆனால், விற்பனை செய்யும் அளவுக்கு கணிசமான மகசூல் கிடைக்காது. ஏழாவது ஆண்டில் இருந்து அதிக மகசூல் கிடைக்கும். டிசம்பர் மாதம் பூக்க ஆரம்பித்து, பிப்ரவரி மாதம் காய்கள் அறுவடைக்கு வரத் துவங்கும். ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 250 கிலோ காய்கள் வீதம் 150 மரங்களில் இருந்து, 37,500 கிலோ காய்கள் மகசூல் கிடைக்கும். ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சம் 10 ரூபாய் முதல் அதிகபட்சம் 30 ரூபாய் வரை விலை கிடைக்கும். 37.5 டன் காய்கள் விற்பனை செய்வதன் வாயிலாக, ஒரு ஆண்டுக்கு 5.62 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.இடுபொருள், உழவு, அறுவடைக்கூலி உள்ளிட்டவற்றுக்கு 1 ஏக்கருக்கு அதிகபட்சம் 20,000 ரூபாய் வீதம் 2.5 ஏக்கருக்கு 50,000 ரூபாய் செலவு போக, 5.12 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது. 2017, 2018ம் ஆண்டுகளில் 1.5 ஏக்கரில் நடவு செய்த பலா மரங்களில் இருந்து இனிமேல் கணிசமான வருமானம் கிடைக்க ஆரம்பிக்கும்.பலா மரங்களுக்கு இடையில் ஊடுபயிராக, 30 வகை பழ மரங்களை பயிர் செய்துள்ளேன். அந்த மரங்களின் பழங்களை விற்பனை செய்வதன் வாயிலாக, ஆண்டுக்கு 30,000 ரூபாய் கிடைக்கும். பலா சாகுபடியில் ஆர்வம் உள்ள விவசாயிகள் பல மாவட்டங்களில் இருந்தும் இங்கு பார்வையிட வருகின்றனர். தமிழ் இலக்கியங்கள் போற்றி புகழக்கூடிய முக்கனிகளில் பலாவும் ஒன்று.பலா மரங்கள் இருந்தாலும் ஆயிரம் பொன்... இறந்தாலும் ஆயிரம் பொன். முதிர்ச்சி அடைந்த பலா மரங்களை மர வேலைப்பாடுகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.தொடர்புக்கு: 86108 81046.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி