உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / தஞ்சையிலும் மீனாட்சி மிஷன் வந்தாச்சு!

தஞ்சையிலும் மீனாட்சி மிஷன் வந்தாச்சு!

மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் சேர்மனும், மூத்த மருத்துவருமான குரு சங்கர்: கடந்த 2010ல் கூட தஞ்சாவூர் மாதிரியான, அதிக மக்கள் வாழும் டெல்டா பகுதியில், 'ஆஞ்சியோ பிளாஸ்டி' செய்யும் உயர் தர மருத்துவமனைகள் வரவில்லை. அப்படியானால் அங்கிருக்கும் மக்கள் மாரடைப்பு பிரச்னை வந்தால் என்ன செய்வர்; அவர்களுக்கெல்லாம் மாரடைப்பு என்பதே வராதா என்ற கேள்விகள் எனக்குள் எழுந்தன.தஞ்சையில் ஏன் இப்படி ஒரு மருத்துவமனை வரவில்லை என்று கேட்டால், 'அது சிறிய ஊர்' என்றனர். சிறிய ஊரோ, பெரிய ஊரோ, சிமென்ட் விலையும், இரும்பு விலையும் ஒண்ணு தான்.மருத்துவ உபகரணங்களுக்கான செலவுகள் எல்லாமே எந்த ஊரில் இருந்தாலும், டாலரில் கொடுத்து தான் வாங்குகிறோம். நாங்கள் அங்கு மருத்துவமனை துவக்கியதால், அங்கு பலரின் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. மீனாட்சி மிஷன் மருத்துவமனையை பொறுத்தவரை, இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ஒரு பகுதியில் வழக்கமாக செயல்படுகிற மருத்துவமனை மாதிரி, கட்டணம் வாங்கி சிகிச்சை செய்யப்படும். இரண்டாவது, சில பிரிவுகளில் நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக மருத்துவ சேவை வழங்கப்படும். குறிப்பாக, புற்றுநோயால் போராடும் குழந்தைகள் பலருக்கு, குறைந்த கட்டணத்திலும், சிலருக்கு எந்த கட்டணமுமின்றி சிகிச்சை அளிக்கிறோம்.பெரியவர்களை விட, குழந்தைகளுக்கு புற்றுநோய் வந்தால் அவர்களை, 90 சதவீதம் எளிதில் காப்பாற்றி விட முடியும். ஆனால், இவையெல்லாம் மக்களுக்கு தெரிந்தால் தானே அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முன்வருவர்...அதற்காக உருவாக்கப்பட்டது தான், 'அறம் செய்து பழகு' என்ற அமைப்பு. அது, விளம்பரம் இல்லை; எங்கள் மக்களின் உண்மை கதை. 100 படுக்கைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தற்போது 1,000 படுக்கைகள் இருக்கின்றன. 'மீனாட்சிக்கு வந்தா உசுர காப்பாத்திருவாங்கய்யா' என்று மக்கள் நினைப்பதால் தான் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். அந்த அளவுக்கு எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர். ஆனால், அளவுக்கு மீறிய கூட்டம் வருவதால், மக்களுக்கு அசவுகர்யம் ஏற்படுகிறது என்பதையும் மறுக்க முடியாது.அதற்காக தான் நாங்கள், மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை துவக்கி இருக்கிறோம். நோயாளிகளின் மீது சூரிய வெளிச்சம் படும் வண்ணம், 'பையோபிலிக்' முறையில் திட்டமிட்டு அறைகளை அமைத்திருக்கிறோம்.'மதுரை சிறிய ஊர். இங்கு பெரிய தொழில் செய்ய முடியாது' என, எண்ணிக் கொண்டு இருப்போர் பலரும் இங்கு வர யோசிப்பர். ஆனால், நாங்கள் உலகில் எந்த மருத்துவ தொழில்நுட்பம் அறிமுகமானாலும், அதை உடனே மீனாட்சி மருத்துவமனைக்கு கொண்டு வர வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்படுகிறோம். இதுவரை, தமிழகத்தில், இந்தியாவில் இல்லாத புதிய தொழில்நுட்பங்களை மக்களுக்காக கொண்டு வந்திருக்கிறோம் என்ற பெருமை எங்களுக்கு இருக்கிறது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை