தேனி, பள்ளப்பட்டி கிராமத்தில், இயற்கை விவசாயத்தில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்யும் முத்துக்காளை: விவசாயம் எங்க குடும்பத்தின் வாழ்வாதாரம். ஏழாம் வகுப்பு தான் படித்துள்ளேன். எங்க குடும்பத்திற்கு 3 ஏக்கர் நிலம் இருக்கு. அதில் தக்காளி, கத்தரி உள்ளிட்ட காய்கறிகளை முழுமையாக இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்தேன். பின், திராட்சை சாகுபடிக்கான அடிப்படை தொழில்நுட்பங்களை தெரிந்து, ஆரம்பகட்ட பணிகளில் இறங்கினேன். இயற்கை முறையில் மண்ணை வளப்படுத்தி, திண்டுக்கல்லில் இருந்து தொழிலாளர்களை வரவழைத்து, 2 ஏக்கரில் பந்தல் அமைத்தேன். திராட்சை சாகுபடிக்கான பந்தல் அமைக்க மட்டும் ஏக்கருக்கு, 3 லட்சம் ரூபாய் வீதம் செலவானது. ஓராண்டில் மூன்று முறை திராட்சை பழங்கள் அறுவடை செய்தேன். 2 ஏக்கரில் மொத்தம், 13,500 கிலோ பழங்கள் கிடைத்தன. மதுரையில் உள்ள பழக்கடைக்காரர்களின் தொடர்பு கிடைத்தது. அவர்களுக்கு நேரடியாக பழங்கள் அனுப்ப ஆரம்பித்தேன். ஒரு கிலோவுக்கு சராசரியாக, 75 ரூபாய் கிடைத்தது. 13,500 கிலோ திராட்சை பழங்கள் வாயிலாக, 10 லட்சத்து 12,500 ரூபாய் கிடைத்தது. கவாத்து இடுபொருட்கள், அறுவடை உள்ளிட்ட எல்லா செலவுகளும் போக, 8 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது. இனி வரும் நாட்களில் படிப்படியாக மகசூல் அதிகரித்து, இன்னும் கூடுதலாக லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இயற்கை விவசாயத்திற்காக, இரண்டு மாடுகள் வளர்க்கிறேன். போதுமான அளவுக்கு எரு உரம் கிடைக்கிறது. திராட்சை சாகுபடியை பொறுத்தவரைக்கும், செவட்டல் நோய் மற்றும் வெள்ளை ஈக்கள் தாக்குதலை எதிர்கொள்வது சவாலானது. செவட்டல் நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, வரும் முன் காப்போம் நடவடிக்கையாக, மீன் அமிலம் தெளிக்கிறேன். இதற்கு நல்ல பலன் கிடைக்கிறது. திராட்சை கொடிகளில் வெள்ளை ஈக்கள் தென்பட்டால், ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த வேண்டும். தரையில் இருந்து, 3 அடி உயரத்தில் குண்டு பல்பை தொங்கவிட்டு, மாலை 6:00 மணியில் இருந்து மறுநாள் காலை 6:00 மணி வரைக்கும் எரிய விடுவேன். பல்புக்கு கீழே, இரும்பு சட்டியை வைத்து அதில், 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி, 100 மி.லி., மண்ணெண்ணெய் கலந்திடுவோம். பல்பு வெளிச்சத்தால் ஈர்க்கப்படும் வெள்ளை ஈக்கள், மண்ணெண்ணெய் கலந்த தண்ணீரில் விழுந்து இறந்து விடும். இந்த தோட்டத்தில் உள்ள வீட்டில் தான் நானும், என் மனைவியும் வாழ்ந்து வருகிறோம். தற்போது, திருடர்கள் பயம் காரணமாக, தோட்டத்தை சுற்றி, 16 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளேன். தொடர்புக்கு: 98944 61374.