உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / 200 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கும் பண்ணை!

200 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கும் பண்ணை!

தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லுார் அருகே கருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களின் கல்வி, மருத்துவம், திருமணம் உள்ளிட்ட தேவைகளுக்கும், சிறு, குறு விவசாயிகளுக்கு குறைந்த வாடகை அல்லது கட்டணமே இல்லாமல் வேளாண் கருவிகள் வழங்கி உதவி வரும், ஏ.கே.ஆர்., வேளாண் பண்ணையை நிர்வகிக்கும், சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த அஜித் ரங்கநாதன்: டில்லியில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். தஞ்சை, அபிராமபுரம் தான் எங்கள் பூர்வீகம். ஆசியாவிலேயே மிகப் பெரிய அதிநவீன செங்கல் சூளையை என் கொள்ளுத் தாத்தா நடத்தினார். பலவித தொழில்கள் நடத்தி, பெரும் செல்வந்தராக உருவெடுத்த பின்னும், விவசாயத்தில் தனி கவனம் செலுத்தினார். அவரை தொடர்ந்து தாத்தா, என் அப்பா மிகுந்த ஈடுபாட்டுடன் விவசாயத்தை தொடர்ந்தனர். எனக்கு விவசாயத்தில் ஈடுபாடு ஏற்பட அப்பா தான் முக்கிய காரணம். 'பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன. ஆனால், விவசாயம் செய்வதில் கிடைக்கும் ஆத்ம திருப்தி வேறு எதிலும் கிடைக்காது. எந்த ஒரு சூழ்நிலையிலும் விவசாயத்தை கைவிட்டு விடக்கூடாது' என்பார். இந்த பண்ணையின் மொத்த பரப்பு, 110 ஏக்கர். கடந்தாண்டு ஏக்கருக்கு, 1,860 கிலோ நெல் சாகுபடி கிடைத்தது. இந்த நெல்லை கோவில்களில் நடக்கும் அன்னதானத்துக்கு நன்கொடையாக கொடுத்து விடுவோம். 15 ஏக்கரில் தென்னை மரங்கள் இருக்கின்றன. ஒரு தேங்காய், 10 ரூபாய் என விற்பனை செய்கிறோம். 5 ஏக்கரில் மா சாகுபடி செய்கிறோம். மரம் ஒன்றில் இருந்து ஆண்டுக்கு, 80 கிலோ வரை பழங்கள் கிடைக்கும். சுற்றுவட்டார பகுதி மக்கள் பயனடையும் வகையில், கிலோ 10 ரூபாய் என விற்பனை செய்கிறோம்; இது நிரந்தர விலை. எங்கள் வீட்டு தேவைக்காகவும், இங்கு வேலை செய்யும் பணியாளர்களின் தேவைக்காகவும், 30 சென்ட் பரப்பில் பலவித காய்கறிகள் சாகுபடி செய்கிறோம். இந்த பகுதிகளில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வீட்டு விசேஷங்களை நடத்த, எங்கள் பண்ணை சார்பில், பந்தநல்லுார் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில், 60 லட்சம் ரூபாய் செலவில் நவீன திருமண மண்டபம் கட்டிக் கொடுத்துள்ளோம். அந்த மண்டபத்திற்கு, நாள் ஒன்றிற்கு, 1,200 ரூபாய் தான் வாடகை. மேலும், பந்தநல்லுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10 லட்சம் ரூபாயில் விழாக்கூடமும் கட்டிக் கொடுத்துள்ளோம். கிராமப்புற மாணவர்கள், குறைந்த கட்டணத்தில் கணினி பயில, ஒரு கம்ப்யூட்டர் சென்டர் அமைத்துள்ளோம். இந்த பண்ணை சிறப்பாக செயல்பட, இங்கு வேலை செய்யும் ஊழியர்களின் ஒத்துழைப்பும், நேர்மையும் முக்கிய காரணம். பரஸ்பரம், நல்லுறவு இருப்பதால் தான், இவ்வளவு பெரிய பண்ணை, 200 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது. தொடர்புக்கு: 63798 39483


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை