மேலும் செய்திகள்
வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
07-Aug-2025
வழக்கறிஞர் பணியில், 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள, வழக்கறிஞர் காஞ்சனா அறிவழகன்: குஜராத்தை பூர்வீகமாக கொண்ட, சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்தவள் நான். எங்கள் சமூகத்தில் அதிகம் படித்த பெண்கள் கிடையாது. என் தந்தை முற்போக்கு சிந்தனை உடையவர். எங்களை படிக்க வைத்து, சமூகத்தில் உயர்த்த வேண்டும் என்று நினைத்தார். அவர் தான் எங்களுக்கு, 'ரோல் மாடல்'. வேலுார் மாவட்ட பார் அசோசியேஷனில் முதல் பெண் இணை செயலராக இருந்திருக்கிறேன். வழக்கறிஞர் தொழிலை, நான் சம்பாதிக்கும் தொழிலாக நினைக்கவில்லை; கற்கும் தொழிலாகத் தான் பார்க்கிறேன். ஒவ்வொரு வழக்கும் ஒவ்வொரு பாடம். பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சட்ட களத்தில் இறங்குகிறேன். வரதட்சணை வழக்குகளை விட, பெண்களுக்கு சொத்தில் உரிமை, குறிப்பாக சம உரிமை, மூன்றாவது, நான்காவது தலைமுறையாக இருந்தாலும் கூட, சொத்தில் உரிமை உண்டு என வாதாடி, பல வழக்குகளில் நியாயம் பெற்று தந்திருக்கிறேன். 50க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்களை அரசு உதவியுடன் தடுத்து நிறுத்தி இருக்கிறேன். கணவர் இறந்த பின், புறக்கணிக்கப்பட்ட பல பெண்களுக்கும், சம சொத்துரிமையுடன், அந்த வீட்டில் வாழும் உரிமையை பெற்றுக் கொடுத்திருக்கிறேன். விவாகரத்தான பெண்களுக்கு ஜீவனாம்சம் உட்பட அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுத்திருக்கிறேன். ஆன்லைன் மோகத்தால், வாழ்க்கையை தொலைத்த பலரையும் மீட்டு, நல்வழிப்படுத்தி இருக்கிறேன். ஒருமுறை, நள்ளிரவு, 12:00 மணிக்கு கணவனால் ஒரு பெண் வீட்டை விட்டு அடித்து துரத்தப் பட்டார் என்று எனக்கு தகவல் வந்தது. அதிரடியாக களத்தில் இறங்கிய நான், 'பெண்ணுக்கு புகுந்த வீட்டில், வசிப்பிட பாதுகாப்பு உரிமை இருக்கிறது' என்று சட்ட ரீதியாக பேசி, அந்த பெண்ணை, அந்த வீட்டில் வசிக்க வைத்தேன். நான் வழக்கறிஞராக பல நுாறு வழக்குகளை நீதிமன்றத்தில் வாதாடி இருக்கிறேன். அவற்றில், 350க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கானவை. பல வழக்குகளை நீதிக்காக, நியாயத்திற்காக பணம் கூட பெறாமல் வாதாடி வென்றிருக்கிறேன். கடந்த, 25 ஆண்டு களில் பொன்னான பல தீர்ப்புகளை பெற்று தந்திருக்கிறேன். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதர வாக களமிறங்கி, பொன் விழா காண்பேன். தீர்ப்புகளை விட, பிரச்னையை தீர்த்து வைப்பதில், முடித்து வைப்பதில், 100 சதவீதம் திருப்தி எனக்கு கிடைக்கிறது!
07-Aug-2025