உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் /  உழைக்கும் உத்வேகத்தை விருதுகள் தருகின்றன!

 உழைக்கும் உத்வேகத்தை விருதுகள் தருகின்றன!

வானொலியில் தொகுப்பாளினியாக இருந்து, தற்போது தொழில் முனைவோராக மாறியுள்ள புதுச்சேரியைச் சேர்ந்த நிவேதா ரகு: மிகவும் சாதாரண குடும்பம் என்னுடையது. இதனால், கல்லுாரி படிப்பை முடித்ததுமே வேலை தேடினேன். சென்னையில் உள்ள ஹலோ எப்.எம்., வானொலியில் தொகுப்பாளினியாக தேர்வானேன். மீடியா வேலையை எங்கள் வீட்டில் யாரும் விரும்பவில்லை. அது நிரந்தரமாக இருக்குமா, வருமானம் போதுமா என்ற சந்தேகம், பெற்றோருக்கு இருந்தது. ஆரம்பத்தில் வேலையில் சேர்ந்தவுடன் எதுவும் தெரியவில்லை; ஆனால், படிப்படியாக கற்று முன்னேறினேன். பல ஊர்களுக்கும், நேரலை நிகழ்ச்சிகளுக்கு சென்று, என் திறமையை வெளிப்படுத்தியதால் வெற்றியடைந்தேன். அது தான் என்னை பிரபலமாக்கியது. பல பிரபலங்களுடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். மீடியா வேலை என்பது, காலை முதல் இரவு வரை அங்கேயே அடைந்து இருக்கிற மாதிரி தோன்றியது. வெளி உலகத்தை பார்க்க முடியவில்லையே... பெற்றோருடன் நேரம் செலவழிக்க முடியவில்லையே என்று நினைக்க ஆரம்பித்தேன். சொந்தமாக ஏதாவது தொழில் செய்யலாம் என்று நினைத்து, அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டேன். விளம்பர வாய்ப்புகள், தனியார் நிறுவனங்களின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்புகள் என்று வரிசையாக வந்தன. உள்ளூரில் என் மாத வருமானம் சராசரியாக, 50,000 ரூபாயாக அதிகரித்தது. இப்போது புதுச்சேரியில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், தொகுப்பாளினியாக என் பெயரை யோசிக்கும் அளவுக்கு, எல்லாருக்கும் அறிமுகமாகி இருக்கிறேன். இந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் புதுச்சேரி, சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, கடலுார், சிதம்பரம், வேலுார் மாவட்டங்களில், 200க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறேன். புதுச்சேரி, முத்தியால்பேட்டையில், 'பெல்லாபி ஹோம்மேடு ஹெர்பல் புராடக்ட்ஸ்' என்கிற சரும, கூந்தலுக்கான தயாரிப்பு பொருட்கள் கடை துவங்கி, நடத்தி வருகிறேன். 'சாதனை பெண்மணி' உள்ளிட்ட பல விருதுகளை, தொகுப்பாளராகவும், தொழில் முனைவோராகவும் வாங்கி இருக்கிறேன். நாம் செய்யும் வேலைக்கு மரியாதை கிடைப்பது, நமக்கு இன்னும் நம்பிக்கையை கொடுக்கும். அப்படித்தான் விருதுகள் வாங்கும்போது மனம் நிறைவாக இருக்கும்; இன்னும் உழைக்க வேண்டும் என்ற உத்வேகம் கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை