உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / உங்களை நம்பி உழைத்து முன்னுக்கு வாருங்கள்!

உங்களை நம்பி உழைத்து முன்னுக்கு வாருங்கள்!

முதுமையிலும் ஆடு, மாடுகள் வளர்த்து சம்பாதிக்கும், விழுப்புரம் மாவட்டம், எறையூர் கிராமத்தைச் சேர்ந்த, 68 வயதாகும் வசந்தா - 76 வயதாகும் குப்புசாமி தம்பதி: வசந்தா: ஆரம்பத்தில் விவசாய வேலைகள் பார்த்து வந்தோம். திருமணமாகி சென்ற எங்கள் மகள், 20 ஆண்டுகளுக்கு முன் மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் வாங்கி, மூன்று ஆடுகள் வாங்கி கொடுத்தாள். 'இவற்றை வளர்த்து , உங்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொள்ளுங்கள்' என்று கூறினாள். சந்தோஷமாக வளர்க்க ஆரம்பித்தோம். அவை வளர்ந்து, பலமுறை குட்டி போட்டு, இப்போது, 30 ஆடுகள் எங்களிடம் உள்ளன. இரு ஆண்டுகளுக்கு முன், ஒரு பசு மாடு வாங்கினோம். அந்த மாடு ஒரு கன்று ஈன்று, அதுவும் வளர்ந்து, தற்போது இரண்டு மாடுகளாக நிற்கின்றன; இரண்டுமே பால் கொடுக்கின்றன. இரண்டு மாடுகளிலும், ஒரு நாளைக்கு, 6 லிட்டர் பால் கிடைக்கும். பால் விற்பனையில் மாதம், 8,000 ரூபாய் வருமானம் வருகிறது. ஆடுகளை பொறுத்தவரை திருவிழா, ஆடி மாதம், தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் கறி வியாபாரிகள் நேரில் வந்து வாங்கிச் செல்வர். உங்களை, 'தாத்தா, பாட்டின்னு தான் நினைத்தோம். ஆனால், ஆடுகளை நல்லா மேய்ச்சலுக்கு விட்டு பார்த்து பார்த்து வளர்த்து வெச்சிருக்கீங்களே'ன்னு பாராட்டி விட்டு செல்வர். ஆடு, மாடுகள் போடும் சாணத்தை விவசாய நிலங்களுக்கு உரமாக கொடுக்கிறோம்; விவசாயிகள் நேரடியாகவே வந்து விலைக்கு வாங்கி செல்வர். குப்புசாமி: சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, காலையில் வீட்டு வேலை, மாடு, ஆடு தொழுவ வேலைகள் பார்ப்போம். மதியம், 2:00 மணிக்கு மேல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வேன். மனைவி, மாடுகளை கூட்டிச் செல்வார். இருவரும் பொழுது சாயுற நேரம் வீடு திரும்புவோம். கை, கால் கழுவி இரண்டு பேரும் கொஞ்சம் நேரம் கதை பேசிவிட்டு, ராத்திரி சாப்பிட்டு துாங்கினால், அப்படி ஒரு துாக்கம் வரும். இளையோருக்கு நாங்க சொல்லி கொள்வது என்னவென்றால், நீங்க எந்த ஊர், சூழ்நிலையில் இருந்தாலும் சம்பாதிக்கிற வாய்ப்பு நிச்சயமாக உங்களை சுற்றியே இருக்கும். அதை கண்டுபிடித்து சம்பாதிக்க வேண்டும். அப்படி சம்பாதிக்கிற காசை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். 'அப்பா கொடுக்கலை, சகோதரன் கொடுக்கலை' என்று எவரையும் குறை சொல்லாமல், 'நாம் இருக்கோம் நமக்கு' என, உங்களை நம்பி உழைத்து முன்னுக்கு வாருங்கள். இந்த வயதிலும் நாங்கள் இருவரும் தினமும் உழைக்கிறோம்; வருமானம் பார்க்கிறோம். அப்படி என்றால், உங்களால் எவ்வளவோ செய்ய முடியும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ