75 வயதிலும் உழைக்க தயங்கியதில்லை!
சென்னை, பெசன்ட் நகர் பீச்சில், 35 ஆண்டுகளாக ராட்டினம் சுற்றி வரும் லட்சுமி பாட்டி:நாங்கள் நான்கு தலைமுறையாக சென்னையில் தான் இருக்கிறோம். தமிழகம் முழுக்க வெவ்வேறு கிராமத்தில் இருக்கும் ராட்டினக்காரங்க, எங்கள் அப்பாவிடம் ராட்டின குதிரைகளை செய்து வாங்கி செல்வர். எனக்கு, 20 வயதில் திருமணமானது. கணவர் இரும்பு பட்டறையில் வேலை செய்தார்.எங்களுக்கு ஐந்து பெண்கள், மூன்று மகன்கள் என மொத்தம் எட்டு பிள்ளைகள். கணவர் வருமானத்தில் குடும்பத்தை நடத்துவது மிகவும் சிரமமாக இருந்ததால், 1975ல் இந்த ராட்டினத்தை எனக்காக அப்பா செய்து கொடுத்தார். அதன்பின் ராட்டினம் குறித்த அனைத்தையும் கற்றுக் கொண்டேன். 50 ஆண்டுகளாக எனக்கு படி அளக்குற சாமி இது.ராட்டினம் வருவதற்கு முன், பல நாட்கள் பட்டினியாக இருந்துள்ளேன். ஆனால், அது வந்தபின் என்னிடம், எப்போதும் 200, 300 ரூபாய் இருக்கும். என் பிள்ளைகள் அனைவரையும், ராட்டினம் சுற்றிய வருமானத்தில் தான் வளர்த்து ஆளாக்கினேன். கடந்த, 1980 - 1990களில் சினிமாவிற்காக வாடகைக்கு ராட்டினத்தை எடுத்து செல்வர். அங்கு அவர்கள் சாப்பாடு போட்டு, 5,000 ரூபாய் கொடுப்பர். உடம்பு நல்லா இருக்கும் வரை, ராட்டினத்தை வாடகைக்கு விட்டுட்டு இருந்தேன்.தற்போது வயதாகி, ராட்டினத்தை கழற்றி, மாட்ட ரொம்ப சிரமமாக இருப்பதால், ஒரே இடத்தில் ராட்டினத்தை நிறுத்தி விட்டேன்.வீட்டு வேலைகளை முடிச்சுட்டு, மதியம் 3:00 மணிக்கு பீச்சுக்கு வந்துடுவேன். ராட்டினம் முழுதும் துடைத்து, எண்ணெய் போட்டு வைத்தால், 4:30 மணிக்கு மேல் சவாரிக்கு வருவர். 9:00 மணிக்கு ராட்டினத்தில் இருக்கும் குதிரை, சேர்களை கழற்றி, பக்கத்தில் இருக்கும் குடிசைகளில் வைத்து விட்டு, வீட்டுக்கு சென்று விடுவேன். சனி, ஞாயிறுகளில் 5,000 ரூபாய் வரை வருமானம் வருகிறது. எப்படி பார்த்தாலும், 40,000 ரூபாய் வரை மாதத்திற்கு கிடைக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை, பெயின்ட் அடிப்பது போன்று சிறு சிறு செலவுகள் வரும்; பெரிய செலவு என எதுவும் கிடையாது.நான் எதற்கு மற்றவர்களுக்கு பாரமாக இருக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால், என் பிள்ளைகளுக்கு என்னால் முடிந்ததை செய்கிறேன்.நான்கு பிள்ளைகளுக்கு, என் வருமானத்தில் தலா ஒரு ராட்டினம் செய்து கொடுத்துள்ளேன். ஒவ்வொரு ராட்டினமும், 1 லட்சம் ரூபாய் மதிப்புடையது.உயிருடன் இருக்கும் வரை என் உழைப்பில் தான் கஞ்சி குடிப்பேன். இப்போது எனக்கு, 75 வயது ஆகிவிட்டது. ஒரு நாளும் உழைக்க தயங்கியது இல்லை!