இன்சுலின் இலையை ஆரோக்கியமாக இருப்பவர்களும் சாப்பிடலாம்!
மொத்தம், 4 ஏக்கரில், 'இன்சுலின்' செடிகள் பயிர் செய்து இலை, துாள், சூப் மிக்ஸ் என மதிப்பு கூட்டி விற்பனை செய்து வரும், விமானப்படையின் முன்னாள் வீரரான, சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த வெங்கடேசன்: எனக்கு பூர்வீகம் சென்னை தான். விமானப்படையில் பணிபுரிந்து, 1990ல் ஓய்வு பெற்று விட்டேன். ஒருமுறை அமெரிக்காவுக்கு சென்றிருந்தபோது, அங்குள்ள முதியோர் இல்லத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு வயதான பெண்மணி ஒருவர் பச்சையாக ஓர் இலையை மென்று சாப்பிட்டு கொண்டிருந்தார். விசாரித்தபோது, 'இது இன்சுலின் இலை... இதை சாப்பிட்டால், சுகர் கட்டுக்குள் இருக்கும்...' என்றார். உடனே, இன்சுலின் செடி குறித்து, சமூக வலைதளங்களில் தேடி அறிந்து கொண்டேன். 'இது, மத்திய மற்றும் தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட தாவரம். நீரிழிவு நோயை எதிர்க்கும் தன்மை கொண்டது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்' என்ற தகவல் கிடைத்தது. இன்சுலின் செடியை தமிழில், 'சுருள் இஞ்சி கீரை' என்று கூறுவர். 2014ல், 4 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, இதன் சாகுபடியில் இறங்கினேன். கேரளாவில் இருந்து ஒரு நாற்று, 25 ரூபாய் வீதம், 500 நாற்றுகள் வாங்கினேன். மருந்தாக பயன்படக்கூடிய இலை என்பதால், இயற்கை முறையில் தான் சாகுபடி செய்கிறேன். வாழை மரம் போன்று தான்... ஒருமுறை நட்டு விட்டால் போதும்; பல ஆண்டுகளுக்கு அறுவடை செய்யலாம். செடியின் பக்க கணுக்கள் வாயிலாக முளைத்தபடியே இருக்கும். நடவு செய்து ஒன்பது மாதத்திற்கு பின் அறுவடை செய்யலாம். தொடர்ந்து, ஐந்து ஆண்டுகளுக்கு இலை பறிக்கலாம். என் வீட்டின் ஒரு பகுதியில் மதிப்பு கூட்டும் கூடம் உள்ளது. பச்சை இலையாகவும் விற்பனை செய்கிறேன். ஆர்டர் கிடைப்பதை பொறுத்து, காய வைத்து பொடியாக்கியும், தேநீர் துாளாகவும், ஜூசாக மதிப்பு கூட்டியும் விற்பனை செய்கிறேன். பச்சை இலைகளை தான் அதிகம் வாங்குகின்றனர். அமெரிக்கா, ஜெர்மன், பிரிட்டன் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறேன். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தான் என்றில்லை... நன்கு ஆரோக்கியமாக இருப்பவர்களும் சாப்பிடலாம். பக்க விளைவுகள் இல்லாததால், இந்தியாவிலும் அலோபதி மருத்துவர்கள், உயர் பதவிகளில் உள்ளோர் என பலரும் வாங்குகின்றனர். ஆண்டுக்கு, 36 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. செலவுகள் போக, 12 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்து வருகிறது. தொடர்புக்கு 94446 30429 www.insulinkeerai.com
ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு ஆசிரியர்!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக ஆங்கிலம் கற்றுத்தரும், 'சூப்பர்நோவா' என்ற நிறுவனத்தின் உரிமையாளரான திண்டுக்கல்லை சேர்ந்த மகரிஷி:அப்பா வங்கி ஊழியர். பிளஸ் 2 முடித்ததும், ஜே.இ.இ., தேர் வில் வெற்றி பெற்றேன். சென்னை ஐ.ஐ.டி.,யில், அப்போது புதிதாக, 'இன்ஜினியரிங் டிசைன் கோர்ஸ்' அறிமுகமானது; அதில் சேர்ந்தேன்.அங்கு நவீன் என்ற நண்பன் கிடைத்தான். படிப்பு முடிந்ததும், மருந்து டெலிவரி நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு, 'சாப்ட்வேர் டெவலப்பர்' முதல், 'பிசினஸ் டெவலப்மென்ட்' வரை அனைத்தும் செய்தேன். மூன்று ஆண்டுகளில், 120 கோடி ரூபாய் விற்பனை செய்யும் அளவுக்கு நிறுவனம் வளர்ந்தது.அந்த நிறுவன உரிமையாளரான அனிருத், எனக்கு முதலாளியாக இருந்தாலும், சக நண்பராகவும் இருந்தார். ஒரு கட்டத்தில், அந்த நிறுவனத்தை வேறு ஒரு பெரிய நிறுவனம் விலைக்கு வாங்கியது. அதனால் நான், என் நண்பன் நவீன் மற்றும் அனிருத் மூன்று பேரும் சேர்ந்து, ஏதாவது செய்ய திட்டமிட்டோம். நான், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன். ஆங்கிலம் கற்றுக் கொள்ள நிறைய சிரமப்பட்டிருக்கிறேன். ஐ.ஐ.டி.,க்குள் நுழையும்போதே மிரண்டு போயிருக்கிறேன்.இதே அனுபவம், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இருக்கிறது. பக்கத்திலேயே உட்கார்ந்து ஒரு டீச்சர் மாதிரி ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க ஒரு சாப்ட்வேர் உருவாக்க நினைத்தோம்.செயற்கை நுண்ணறிவான, ஏ.ஐ., அதற்கான எல்லா சாத்தியங்களையும் கொண்டு வந்தது. ஓராண்டு காலம் சாப்ட்வேரில் வேலை பார்த்தோம். அழகான ஏ.ஐ., டீச்சர் பிறந்தாங்க; 'நோவா' என பெயரிட்டோம்.நாங்கள் எதிர்பார்த்த கதவுகள் திறந்தன. கிராமப்புறங்களில் கூட நோவாவுக்கு வரவேற்பு இருக்கிறது. தற்போது ஹிந்தி, கன்னடம், மராத்தி, குஜராத்தி வழியாகவும் ஆங்கிலம் கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. ஒன்றாம் வகுப்பு மாணவர் முதல், 70 வயது முதியவர் வரை நோவா வாயிலாக ஆங்கிலம் கற்றுக் கொள்கின்றனர்.அடுத்து கணிதம், அறிவியலை கற்றுக் கொடுக்க முடியுமா என, ஆய்வு செய்து வருகிறோம்.அது நடந்து விட்டால், ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு ஆசிரியர் என்ற கனவு நிறைவேறி விடும். அரசு பள்ளிகளுக்கு இதை எடுத்துச் செல்ல வேண்டும். அந்த நாளுக்காக காத்திருக்கிறோம்.