உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / தேடி வரும் வெளிநாட்டு பயணியர்!

தேடி வரும் வெளிநாட்டு பயணியர்!

மதுரை, முனிச்சாலை சந்திப்பில், 90 ஆண்டுகளாக இயங்கி வரும் திருமலை மடைகருப்புசாமி பருத்திப்பால் கடையின் உரிமையாளர் சந்தானம்:வியாபாரம் என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்டது. இந்த கடைக்காரர் ஏமாற்றமாட்டார் என்ற நம்பிக்கை, வாடிக்கையாளருக்கு வந்துவிட்டால் போதும்... வியாபாரம் வெற்றிதான். ஆனால், அந்த நம்பிக்கையை பெற, நாம் அடிப்படை விஷயங்களில் எந்த சமரசமும் இல்லாமல் தொழில் செய்ய வேண்டும்.ஒரு டம்ளர் பருத்திப்பாலின் குறைந்தபட்ச விலை, 20 ரூபாய். ஆனால், இடைப்பட்ட காலத்தில் கருப்பட்டியின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. அப்படி விலை உயர்ந்தாலும், கருப்பட்டிக்கு பதிலாக சர்க்கரை சேர்ப்பதில்லை; அதேசமயம், பருத்திப்பாலின் விலையையும் கூட்டவில்லை. எப்போதும் மாறாத இந்த கொள்கைதான், எங்களை தேடி மக்களை வரவைக்கிறது.கடந்த 1930ல் கடையை துவக்கினார் அப்பா. இப்பகுதியில் சவுராஷ்டிரா மக்கள் அதிகம். அவர்கள், கர்ப்ப காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்துக்கு பருத்தியை அவித்து சோறு போல கொடுப்பர்.அது மிகவும் சுவையாக இருக்கும். நாம் சோறாக கொடுக்காமல், பருத்தியை அரைத்து அதனுடன் கருப்பட்டி, தேங்காய்ப்பூ உள்ளிட்ட சில பொருட்களை சேர்த்து பாலாக கொடுத்தால் என்னவென்று யோசித்து, பருத்திப்பால் வியாபாரத்தை அப்பா துவக்கினார்.இப்பகுதியில் தொழிலாளர்கள் அதிகம். ஒரு கிளாஸ் பருத்திப்பால் குடித்தால், ஒருவேளை உணவு சாப்பிட்டது போல் தெம்பாக இருக்கும். அவர்களும் விரும்பி அருந்த ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு உடல் சோர்வை நீக்கும் பானமாகவே மாறியது. அதுமட்டுமின்றி சளி, இருமலுக்கு நிவாரணம் தரக்கூடியதாகக் கருதி, பலரும் விரும்பி குடிக்க ஆரம்பித்தனர்.அப்பாவுக்கு பின் நானும், இப்போது என் மகனும் இத்தொழிலை செய்து வருகிறோம். எங்களுக்கு கிடைத்த பெயரை வைத்து சம்பாதிக்க நினைத்திருந்தால், மதுரையில் பல இடங்களில் கிளைகளை திறந்திருப்போம். ஆனால், இப்போது வரும் லாபம் போதுமென்று நினைத்துதான், இங்கேயே எப்போதும் தயாரிக்கும் அதே அளவுக்கு பருத்திப்பாலை தயார் செய்கிறோம்.அப்பா காலத்தில் வந்த பலர், இப்போதும் அவர்களின் பிள்ளைகள், பேரன்களுடனும் வருகின்றனர். எங்கள் பருத்திப்பாலின் தரம், சுவை பற்றி தெரிந்துகொண்ட வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணியரும் எங்கள் கடையை தேடி வருகின்றனர்.மக்கள் விரும்பி அருந்தும் ஒரு பானத்தை சுவையுடனும், தரத்துடனும் தரும் இந்த மகிழ்ச்சி போதும் எங்களுக்கு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !