ஆடுகள் விற்பனை வாயிலாக, கடந்த எட்டு ஆண்டுகளாக நிறைவான லாபம் பார்த்து வரும் திருநெல்வேலி மாவட்டம் களக்குடி கிராமத்தைச் சேர்ந்த பார்வதி: விவசாய குடும்பத்தை சேர்ந்த நான், பிளஸ் 2 படித்து முடித்ததும் அம்மாவுக்கு உதவியாக விவசாய வேலைகளில் கவனம் செலுத்தினேன். எங்கள் வீட்டில் நிறைய ஆடுகள் வளர்த்தோம். நான் தான் பராமரித்தேன். கணவரும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் தான்; 5 ஏக்கர் நிலம் உள்ளது. 'பயிர் சாகுபடியை மட்டுமே சார்ந்திருக்காமல், ஆடு வளர்ப்பிலும் ஈடுபட்டால் கூடுதல் வருமானம் பார்க்கலாம்...' என கணவரிடம் கூற, 'ஆடு வளர்ப்பதெல்லாம் சரிப்படாது...' என்றார். ஆடு வளர்க்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் ஏக்கமாகவே இருந்தது. எட்டு ஆண்டுகளுக்கு முன், எங்கள் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், 'தென்காசியில் உள்ள மகன் வீட்டுக்கு போறேன். என் ஆடு, நிறைமாத சினையாக இருப்பதால், பஸ்சில் கொண்டு போக முடியாது. அதை என்ன செய்வதென தெரியவில்லை...' என வருத்தமுடன் கூறினார். உடனே அந்த ஆட்டை விலைக்கு வாங்கினேன். அடுத்த சில நாட்களில், அந்த ஆடு இரு கிடா குட்டிகளை ஈன்றது. எட்டு மாதம் வரை வளர்த்து, விற்றேன். அந்த பணத்தில் இரண்டு பெட்டை ஆடுகளை வாங்கினேன். நாளடைவில், ஆடுகளின் எண்ணிக்கை பல மடங்காக பெருகின. ஆடு வளர்ப்பை பொறுத்தவரை, பெட்டை ஆடுகள் தான் அட்சய பாத்திரம்; அதை விற்பனை செய்யக்கூடாது. கிடாக் குட்டிகளை மட்டும் தான் விற்பனை செய்யணும் என, முடிவெடுத்தேன். பெட்டை ஆடுகளின் எண்ணிக்கையும், கிடா ஆடு விற்பனை மூலம் கிடைத்த வருமானமும் பன்மடங்காக பெருகியது. இதை பார்த்த என் கணவரும், ஆடு வளர்ப்புக்கு உதவ ஆரம்பித்தார். தற்போது ஆட்டு பண்ணையில், 70 தாய் ஆடுகள், ஏழு கிடா ஆடுகள், 50 கிடா குட்டிகள், 40 பெட்டை குட்டிகள் உள்ளன. 70 தாய் ஆடுகள் வாயிலாக, 210 குட்டிகள் கிடைக்கும். கிடாக்குட்டிகளை, ஒன்பது மாதங்கள் வரை வளர்த்து, தலா 20 - 24 கிலோ எடையில் விற்பனை செய்கிறேன். கருப்பு நிற ஆடுகளுக்கு அதிக விலை கிடைக்கும். கடந்த ஆண்டு, 80 கிடாக்கள் விற்பனை மூலம், 9.13 லட்ச ரூபாய் வருமானமாகவும், பராமரிப்பு மற்றும் இதர செலவுகள் போக, 7.13 லட்ச ரூபாய் லாபமும் கிடைத்தது. பண்டிகை காலங்களிலும், கோவில் திருவிழாவின் போதும், வியாபாரம் பரபரப்பாக இருக்கும். எப்போதெல்லாம் பணத்தேவை ஏற்படுகிறதோ, அப்போது, இரண்டு, மூன்று ஆடுகளை விற்று, நம் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். பெண்கள் தங்கள் சொந்த காலில் நின்று வருமானம் ஈட்ட மிகச்சிறந்த தொழில், ஆடு வளர்ப்பு! தொடர்புக்கு: 89735 38508