உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / இசைக்காக படிப்பை விட்டுக் கொடுத்து விடவில்லை!

இசைக்காக படிப்பை விட்டுக் கொடுத்து விடவில்லை!

இசைத் துறையில் தனக்கென்று தனி இடம் பிடித்து வரும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்த மஹன்யா ஸ்ரீ: சிறு வயதிலேயே இசையில் ஆர்வம் இருந்ததால், என் பெற்றோர் இசை வகுப்பில் சேர்த்து விட்டனர். பாம்பே ஞானம் அவர்களின் இயக்கத்தில், எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் வாழ்க்கை வரலாற்று நாடகம் சமீபத்தில் அரங்கேறியது.அதில், எம்.எஸ்., அம்மாவின் 6 வயது முதல் 18 வயது வரையிலான பாடல்களை பாடி இருக்கிறேன். அந்த நாடகம் தற்போது பல்வேறு இடங்களில் நடத்தப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னையில் நடக்கும் மார்கழி இசை விழாவில், முக்கிய சபாக்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன்.தற்போது, ஆறாவது ஆண்டாக இந்த சீசனிலும் பல சபாக்களில் என் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 2022ல் நான் பாடிய அய்யப்ப சுப்ரபாதம், 18 ராகங்களில் ட்யூன் செய்யப்பட்டு, மலேஷியாவில் உள்ள ஜோஹர் அய்யப்பன் கோவிலில் வெளியிடப்பட்டது. இறைவனை துயில் எழுப்புவதற்காக, தினமும் காலையில் அந்த கோவிலில் அந்த சுப்ரபாதம் இசைக்கப்படுகிறது.ஓசூரில் நடந்த ஓர் இசை நிகழ்ச்சியில், எஸ்.பி.பி., சாருடன் இணைந்து பாடி இருக்கிறேன். நந்தலாலாவின் சகோதரி மதியொளி எழுதிய பாடல்களை, எச்.எம்.வி.ரகுவுடன் இணைந்து இசை அமைத்து பாடி இருக்கிறேன். அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் கச்சேரிகள் வழங்கி உள்ளேன். தனிப்பட்ட முறையிலும் பல்வேறு ஆல்பங்களை வெளியிட்டு இருக்கிறேன்.இசைக்காக நான் படிப்பை விட்டுக் கொடுத்து விடவில்லை. ஆர்வமும், தொடர் உழைப்பும் இருந்தால், தனித்திறமையை வளர்த்துக் கொள்வதுடன், படிப்பிலும் முதலிடம் பிடிக்க முடியும். சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த எனக்கு, பிளஸ் 2 படிக்கும்போது மலேஷியா, புதுடில்லி தமிழ்ச் சங்கம், சென்னையில் உள்ள சபாக்கள் என, 19 நிகழ்ச்சிகள் இருந்தன. ஆனாலும், பொதுத் தேர்வில் 479 மதிப்பெண் எடுத்து, பள்ளி அளவில் இரண்டாவது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றேன்.கடந்த 2017ல், 'பாலகானாம்ருதவாணி' என்ற பட்டம், 2018 - 19ம் ஆண்டுக்கான தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் கலை இளமணி பட்டமும் பெற்றுள்ளேன். 2019ல், சென்னை ஆர்.ஆர்., சபாவில் டிரினிட்டி மியூசிக்கல்ஸ் வழங்கிய ரைசிங் ஸ்டார் விருதையும் பெற்று இருக்கிறேன்.கடந்தாண்டு திருவாரூரில் நடந்த மும்மூர்த்திகள் விழாவில், தமிழிசை சவுந்தரராஜனிடம் இருந்து 'கானகிசல்யா' என்ற விருதை பெற்றேன். தவிர, நாட்டியமும் கற்றிருக்கிறேன். ஓவியம் வரைவதிலும் ஆர்வம் உண்டு. தற்போது சி.ஏ., படித்துக் கொண்டிருக்கிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை