மேலும் செய்திகள்
63 ஆண்டுகளாக சோடா கடை; அசத்தும் 96 வயது தாத்தா!
16-Apr-2025
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், 'மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா' தள்ளுவண்டி கடையை, 29 ஆண்டுகளாக நடத்தி வரும் ஷேக் தாவூத்: மதுரை பக்கத்தில் இருக்கும் சிவகங்கை மாவட்டம், திருபுவனம் தான், நான் பிறந்து வளர்ந்த ஊர். குடும்ப சூழ்நிலையால் சிறு வயது முதலே மளிகை கடை, ஜவுளிக்கடை என பல வேலைகளுக்கு சென்றேன். அதன்பின் சொந்த ஊரிலேயே மளிகை கடை நடத்தினேன். சூழ்நிலையால், கோவைக்கு குடும்பத்துடன் வந்துவிட்டேன்.ஜிகர்தண்டா கடையில் வேலை பார்த்த அனுபவம் இருந்ததாலும், ஜிகர்தண்டா மக்களுக்கு பிடித்த ஒரு பானம் என்பதாலும், அதையே தொழிலாக செய்யலாம் என்று முடிவெடுத்தேன். வீட்டு முறை தயாரிப்பு, தரம், சுவை, குறைந்த விலை என தொழிலை ஆரம்பித்தேன்.நாங்கள் அண்ணன், தம்பிகள் என மூவர் சேர்ந்து ஆரம்பித்த கடை இது. என் சகோதரர்கள், கோவையில் இப்போது வேறு வேறு இடங்களில் தனிக்கடைகள் நடத்தி வருகின்றனர்.இப்போது கோவை, 'புரூக் பீல்டு மால்' இருக்கும் பகுதியில் 1997ல் முதன்முதலாக கடை போட்டோம். அதன்பின் தற்போது இங்கு கடை போட்டுள்ளேன்.என் மனைவி மட்டும் தான் எனக்கு உதவி ஆள். இருவருமே கஷ்டம் பார்க்காமல், அதிகாலை முதல் நள்ளிரவு வரை உழைப்போம்.எங்கள் கடையில் சாதா ஜிகர்தண்டாவை, 60 ரூபாய்க்கும், ஸ்பெஷல் ஜிகர்தண்டாவை, 80 ரூபாய்க்கும் கொடுக்குறோம். எவர்சில்வர் டம்ளர்களை தான் பயன்படுத்துகிறேன். நான் பட்ட கஷ்டமெல்லாம் என்னோடு போகட்டும் என்று, என் மகன்களை படிக்க வைக்கிறேன். அதனால் நிலையான வருமானம் வேண்டும் என்பதால், தொழிலில், 'ரிஸ்க்' எடுக்கவில்லை. வங்கியில் லோன் வாங்கலாம் என்று நினைப்பேன். ஆனால் கட்ட முடியாமல் போனால், அந்த சுமை குடும்பத்து மேல் விழுந்துடுமே... பிள்ளைகளை படிக்க வைக்க பாரம் உண்டாகிடுமேன்னு, இப்போது வரை தள்ளுவண்டியில் தான் கடையை நடத்துகிறேன்.சிலர், 'ஏதாவது விளம்பரம் செய்தால், கூட்டம் நிறைய வருமே' என்று கேட்பர். விளம்பரத்துக்கு செலவழிக்கிற ரூபாய்க்காக, நாம் ஜிகர்தண்டா விலையை அதிகமாக்க வேண்டும். நமக்கு இப்போது இருக்கும் அடித்தட்டு வாடிக்கையாளர்களுக்கு அது சுமையாக மாறும்; அதனால், அதுகுறித்து யோசிக்கவில்லை. இப்போது வர்றவங்களே போதும் நமக்கு. அதனால் தான் தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல நினைக்கவில்லை.ஆயிரம் சொந்தங்களை என் தொழிலும் சென்னையும் கொடுத்திருக்கிறது!
சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் காய்கறி விற்கும் மூதாட்டி பத்மினி:என் சொந்த ஊர், விழுப்புரம் பக்கத்தில் உள்ள ஒரு கிராமம். 66 வயதாகிறது; 44 ஆண்டு களாக இங்கு தான் கடை போடுகிறேன். இந்த ஏரியாவில் யார்கிட்ட என் பெயரை சொன்னாலும், அடையாளம் காட்டுவாங்க. வர்றவங்க எல்லாம் அம்மா, ஆயான்னு கூப்பிடும்போது சந்தோஷமாக இருக்கிறது. இந்த இடம் பூர்வீகம் மாதிரி ஆகிவிட்டது. என் 18 வயதில், அத்தை மகனுடன் திருமணமாகி சென்னை வந்தேன். ஐந்து ஆண்டுகள் நல்லபடியாக வாழ்ந்தோம். திடீர்னு அவர் உடம்புக்கு முடியாமல் இறந்துவிட்டார். என் மகனுக்கு அப்போது, 4 வயது. பளிச்சுன்னு சேலை கட்டியதில்லை. எதற்கும் ஆசைப்பட்டது இல்லை. மகன் மட்டும் போதும்னு இருந்துவிட்டேன். கணவர் இறந்தபின், மாமியார் தான் என்னையும், என் மகனையும் பார்த்துக் கொண்டார்.கணவர் இல்லாத குறை தெரியக்கூடாது என்று, ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்தார். மாமியார் இதே ஏரியாவில் தான் காய்கறி வியாபாரம் பார்த்து வந்தார். அவருக்கு உதவியாக நானும் கூட வர ஆரம்பித்தேன்.மாமியாரிடம் வேலை கற்றுக் கொண்டபின், தனியாக கடை போடுகிறேன் என்று கூறினேன். 50 ரூபாய்க்கு காய்கறி வாங்கி, இந்த இடத்தில் கடை வைத்துக் கொடுத்தார்.ஆரம்பத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து தான் காய்கறி வாங்கி வருவேன். இப்போது வயதாகி விட்டதால், தி.நகரில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் வாங்கி விற்கிறேன்.காலையில் 9:00 மணிக்கு காய்கறிகளை எல்லாம் வாங்கி வருவேன். மக்களுக்கு நேரம் இல்லை என்பதால், தோல் உரித்த பீன்ஸ், மொச்சை, ஆய்ந்து வைத்த கீரைகள் எல்லாம் நன்கு விற்பனையாகும். அதில் லாபமும் அதிகம். மாலை 5:00 முதல் இரவு 11:00 மணி வரை வியாபாரம் நன்றாக இருக்கும். அதன்பின் மிச்சம் மீதி இருப்பதை எடுத்துட்டு வீட்டிற்கு செல்வதற்கு நள்ளிரவு, 12:00 மணி ஆகும். இப்படித்தான் பிழைப்பு ஓடுகிறது.மிகவும் கஷ்டப்பட்டு மகனை வளர்த்து, திருமணமும் செய்து வைத்து விட்டேன். அவன் தனியாக வியாபாரம் செய்கிறான். வீட்டில் உட்கார்ந்து சாப்பிட மனசு வரவில்லை. அதனால் தினமும் வியாபாரத்துக்கு வந்து விடுவேன். தினமும் 6,000 ரூபாய்க்கு காய்கறி வாங்கி வருவேன்; அதில், 1,500 ரூபாய் லாபம் கிடைக்கும். கிடைக்கும் லாபத்தில் என்னால் முடிந்ததை மகன் குடும்பத்திற்கு தருவேன். அதில் ஒரு ஆத்ம திருப்தி.தனியாக வாழ்க்கையை துவங்கிய எனக்கு, இன்று ஆயிரம் சொந்தங்களை என் தொழிலும், சென்னையும் கொடுத்திருக்கிறது. வாழ்க்கை நிறைவாக இருக்கிறது. வேறென்ன வேண்டும்!
16-Apr-2025