உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் /  கணவர் வைத்த புள்ளியை ஓவியமாக்கி இருக்கிறேன்!

 கணவர் வைத்த புள்ளியை ஓவியமாக்கி இருக்கிறேன்!

ஓவியத்தில் இளங்கலை பட்டம் பெற்று, பயிற்சி வகுப்புகள், ஓவிய கண்காட்சி என ஓய்வில்லாமல் ஓடும், 41 வயதாகும் பிரியா: தஞ்சாவூர் மாவட்டம், வளையப்பேட்டை கிராமம் தான் என் சொந்த ஊர். பிளஸ் 2 முடித்ததும், என் தாய்மாமா இளையராஜாவை காதலித்து, திருமணம் செய்து கொண்டேன். அவர், உங்களுக்கெல்லாம் தெரிந்த பிரபல தத்ரூப ஓவியர் எஸ்.இளையராஜா தான். கணவர் தான், ஓவியம் சார்ந்து படிக்கும்படி வழிகாட்டினார். சென்னை எழும்பூரில் இயங்கும் அரசு கவின்கலை கல்லுாரியில், இளங்கலை கவின்கலை படிப்பில் சேர்ந்தேன். மூன்றாம் ஆண்டு படிப்பு துவங்கிய நேரத்தில், எனக்கு மகள் பிறந்தாள். குழந்தையையும் பார்த்துக் கொண்டு, படிப்பை தொடர சிரமப்பட்டு, படிப்பை நிறுத்திட்டேன். அடுத்து ஒரு மகனும் பிறந்தான். அதன்பின், கணவர் தான் எனக்கு ஓவியம் வரைய கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். வாழ்க்கை நன்கு சென்று கொண்டிருந்தது. 2021ல் எனக்கும், கணவருக்கும் கொரோனா தொற்று வந்தது. மூன்று மாதங்கள் கழித்து தான், கணவரின் மரணச் செய்தியே எனக்கு தெரியவந்தது. என்ன செய்யப் போகிறோம், யார் உதவி செய்வர், குழந்தைகள் படிப்பு என, ஏகப்பட்ட கேள்விகள் மனதிற்குள் ஓடின. அழுது கரைந்த என்னை ஆறுதல் கூறி, சமாதானம் செய்தது என் குழந்தைகள் தான். 'குழந்தைகளை நன்கு பார்த்துக்கொள்...' - இதுதான் மருத்துவமனைக்கு செல்லும் போது கணவர், என்னிடம் கூறிய கடைசி வார்த்தை. அதை காப்பாற்ற வேண்டும் என்று உறுதி எடுத்தேன். ஓவியங்கள் வரைய ஆரம்பித்தேன். வண்ணங்கள் என்னை மீட்டெடுக்க ஆரம்பித்தது. வருமானத்துக்காக ஓவிய வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தேன். அதில் குடும்பத்தை நடத்த ஆரம்பித்தேன். என், 36 வயதில், மீண்டும் ஓவியம் படிக்க கல்லுாரி செல்ல ஆரம்பித்தபோது விமர்சனங்கள் வந்தன. ஆனால், அதை நான் பொருட்டாகவே நினைக்கவில்லை. எனக்கு ஓவியங்கள் வரைய தெரியும். முறைப்படி படித்து வரைந்தால், இன்னும் நேர்த்தியான ஓவியங்களை வரைய முடியும் என நினைத்து, கல்லுாரியில் சேர்ந்தேன். கடந்த மே மாதம் தான் படிப்பு முடிந்தது. 41 வயதில் டிகிரி வாங்கினேன். என் ஓவியம் போல் வாழ்க்கையும் நவீனத்தை தழுவி இருக்கிறது. கணவர் இருந்திருந்தால், இந்த சாதனையை கொண்டாடி தீர்த்திருப்பார். அவர் வைத்த புள்ளியைத் தான், ஓவியமாக்கி இருக்கிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை