மேலும் செய்திகள்
கனவுகளை வென்று 'கனா காணும்' தர்ஷினி
22-Dec-2024
தமிழ், தெலுங்கு, மலையாளம் என, 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள 76 வயதாகும், 'வெண்ணிற ஆடை' நிர்மலா: அப்பாவுக்கு, நான் நாட்டியம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை. நான் பள்ளிக்கூடம் சென்றதே இல்லை.வீட்டிற்கே வாத்தியார்கள் வந்து சொல்லித் தருவர். என் நாட்டிய நிகழ்ச்சிகளுக்கும் பெரிதாக கூட்டம் சேரவில்லை; பிரபலமானவர்களுக்கு தான் கூட்டம் சேரும் என்பதால், சினிமாவில் நடிக்க அப்பா அனுமதித்தார்.'வெண்ணிற ஆடை' என்ற படத்தில் தான் அறிமுகமானேன். தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர் என, முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருந்தேன்.1981ல், 'தெய்வத் திருமணங்கள்' படத்துக்குப் பின் இனி நடிக்கக் கூடாது என, முடிவு செய்தேன். பாரதிராஜா, பாலசந்தர் போன்றோர் அழைத்தும் மறுத்து விட்டேன்.ஆனால், 1998ல் பிரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ், 'உன்னை படங்களில் பார்க்கவே முடியலையே... எத்தனையோ பேர் நடிக்க ஆசைப்பட்டும், வாய்ப்பு கிடைப்பதில்லை. நடிக்கிற திறமை உன்கிட்ட இருக்கு; அதை விட்டு விடாதே' என்றார்.அவர் கூறியதற்காகவே நடிக்கத் துவங்கினேன். 2013ல் தெய்வ மகள் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஐந்து ஆண்டுகள் அந்த சீரியலில் ஒன்றிப்போய் விட்டேன். இன்றும் என் அடையாளமாகி இருப்பது, அந்த சீரியலில் நடித்த அம்மா கதாபாத்திரம் தான். 'என் பொண்ணு சாதாரணமா கல்யாணம் பண்ணிட்டு வாழப் பிறந்தவ இல்லை. அவ சாதனை படைக்க பிறந்தவ' என்று அப்பா அடிக்கடி கூறுவார். அதனால், எனக்கு திருமணம் ஆகாததை குறையாகவே நினைத்ததில்லை.கொரோனாவிற்கு பின், பாதுகாப்பு கருதி நடிக்கவில்லை. ஆனால், அப்பா எனக்கு வாங்கிக் கொடுத்த நாட்டிய புத்தகங்களில் உள்ளவற்றை குறிப்பெடுத்து, நாட்டியக் கலைஞர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் உதவும் விதத்தில், 'சாதனா பரதம்' என்ற யு - டியூப் சேனல் வாயிலாக தொகுத்து வழங்குகிறேன்.சென்னை மற்றும் திருவள்ளூரில் நாட்டியப் பள்ளிகள் நடத்துகிறேன். ஆன்லைனில், வெளிநாட்டில் இருந்தும் கற்றுக் கொள்கின்றனர். நாட்டியம் என்பது யோகா மாதிரி. அது, என் எனர்ஜிக்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.'பூவா தலையா' படத்தில் நடித்தது முதல் இன்று வரை நடிகை சச்சுவும், நானும் மிக நெருக்கம்.அவங்க அடிக்கடி, 'நாம கல்யாணம் பண்ணிக்காததால தான் சந்தோஷமாக, எனர்ஜியாக இருக்கோம்'னு சொல்வாங்க.அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.
22-Dec-2024