காய்கறி தோட்டம் அமைத்து நேரத்தை செலவிடுகிறேன்!
தேனி மாவட்டம், பழனி செட்டி என்ற ஊரைச் சேர்ந்த யமுனா தேவி: என் வயது, 39. வீட்டில் கணவர், குழந்தைகள் அனைவரும் கிளம்பிய பின், 'டிவி' மற்றும் மொபைல் போனில், நேரத்தை செலவு செய்வது போல இருந்தது. அந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்றுவதற்கு ஏதாவது செய்யலாமே என்று தோன்றியது.சிறு வயது முதலே, செடிகள் வளர்ப்பதில் ஆர்வமாக இருப்பேன். இயற்கை முறையில் தோட்டம் அமைப்பது தொடர்பாக, பத்திரிகைகளில் வரும் செய்திகள், வீடியோக்களை பார்த்து தோட்டம் அமைப்பதற்கான வேலைகளை செய்ய துவங்கினேன்.எங்கள் வீட்டு பக்கத்தில், கடைகள் எதுவும் கிடையாது. வீட்டுக்கு தேவையான காய்கறிகள் வாங்குவதற்கு, சிறிது துாரம் நடக்க வேண்டும். அதனால், எனக்கு கிடைத்த நேரத்தை பயனுள்ளதாக மாற்றி, வீட்டுக்கு தேவையான காய்கறிகள், கீரைகள், பூக்கள், மூலிகை செடிகள் என, வீட்டு தோட்டத்தை அமைத்து, வளர்க்க ஆரம்பித்தேன்.ரசாயன உரங்களை பயன்படுத்தாமல், இயற்கை உரங்களை பயன்படுத்தி தான் தோட்டத்தை பராமரிக்கிறேன். செம்மண்ணும், தேங்காய் நார்க்கழிவும் அளவாக கலந்து, தொட்டியில் நிரப்பி, அதில் தான் செடிகளை வளர்க்கிறேன். அதனால் மண் இறுக்கமாக இருப்பதுடன், செடிகளும் ஆரோக்கியமாக வளர்கின்றன. தற்போது, 30க்கும் மேற்பட்ட தொட்டிகளில் செடிகள் வளர்க்கிறேன்.இயற்கை உரத்தில், வாழைப்பழத் தோலுக்கு முக்கிய இடம் இருக்கிறது. வாழைப்பழத் தோலை, சிறு குழிக்குள் புதைத்து, உரமாக்கி, செடிகளுக்கு பயன்படுத்துகிறேன். செடிகளில் மாவுப்பூச்சி பிரச்னை இருந்தால், மைதா மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றுவேன். அப்போதும் பிரச்னை சரியாகவில்லை எனில், வேப்பெண்ணெய்யை தண்ணீரில் கலந்து தெளிப்பேன். மேலும், பூச்சிகள் தாக்காமல் இருக்க, அதன் மேல், சாம்பலை துாவி விடுவேன். மூன்று நாளைக்கு ஒரு முறை ஏதாவது ஒரு கீரை, வீட்டு தேவைக்கு கிடைக்கும். தினமும் சில காய்கறிகள், அரை கிலோவிற்கு குறையாமல் கிடைப்பதால், பீன்ஸ், கேரட், கோஸ் மாதிரியான காய்கறிகளை மட்டும் தான் கடையில் வாங்குவேன்.நானே விதைத்து, பராமரிப்பு மற்றும் அறுவடை செய்த காய்கறிகளை, என் குடும்பத்தாருக்கு சமைத்து கொடுக்கும் போது கிடைக்கிற திருப்தியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஏதாவது மன அழுத்தம் இருந்தால் கூட, தோட்டத்திற்கு வந்து வேலைகளை செய்ய ஆரம்பித்திடுவேன்.தோட்டத்தில் நான் வேலை செய்வதை பார்க்கும் என் குழந்தைகளும் தண்ணீர் ஊற்றுவது, செடிகளை பராமரிப்பு செய்வது என, ஆர்வமாக வேலைகளை செய்கின்றனர். என் தோட்டத்தை பார்த்து அக்கம் பக்கத்தில் இருக்கிறவர்கள், உறவினர்கள், என பலரும் மாடித்தோட்டம் அமைத்துள்ளனர். நாம் செய்கிற நல்ல விஷயம், மற்றவர்களை போய் சேர்ந்தால், இரட்டிப்பு சந்தோஷம் தானே!