உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / லட்சியத்தை அடையாமல் ஓய மாட்டேன்!

லட்சியத்தை அடையாமல் ஓய மாட்டேன்!

இந்தியாவின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநரான, தேனி மாவட்டம், போடிநாயக்கனுாரைச் சேர்ந்த வீரலட்சுமி: எனக்கு குத்துச்சண்டை போட்டிகளில் சாதித்து, காவல் துறை பணிக்கு செல்லதான் ஆசை; ஆனால், வழிகாட்ட ஆளில்லை. அதனால், டிரைவிங் படித்தேன். சொந்தமாக ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஆரம்பிக்கலாம் என்று அனுமதி கேட்டபோது, ஆட்டோமொபைல் டிப்ளமா முடித்து இருக்க வேண்டும் என்று கூறிவிட்டனர். அப்போது எனக்கு திருமணம் ஆனது. பிழைப்பு தேடி சென்னை வந்தோம். திருவேற்காடில் உள்ள ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பயிற்சியாளராக பணிக்கு சேர்ந்தேன். ஆயினும், சொந்தமாக டாக்சி வாங்கி, பயிற்சி பள்ளி வைக்கிற ஆசை அடிமனதில் இருந்தது; வேலையை விட்டுவிட்டு, 'லீசு'க்கு டாக்சி வாங்கி ஓட்டினேன். ஐந்து ஆண்டுகள் டாக்சி ஓட்டுநராக, சென்னைக்கு வெளியே சென்று வந்ததில், உலகம் விசாலமானது என புரிந்தது. இதற்கிடையில் இரண்டு குழந்தைகள் பிறந்தன. நிரந்தர வருவாய் தரும் வேலையில் சேர்ந்து, குழந்தைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டும் என்று தோன்றியது. அந்த சமயத்தில் தான், 108 அவசரகால ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வாய்ப்பு வந்தது. முதல் பெண் ஓட்டுநர் என்பதால், முதல்வர் வரைக்கும் என் நியமன கோப்பு சென்றுள்ளது. தேர்வானதும், 'நீங்கள் தான் இந்தியாவின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்' என்று பலரும் கூறினர். இரண்டு ஆண்டுகள் கொரோனா காலத்தில், சென்னையில் ஆம்புலன்ஸ் ஓட்டினேன்; உயிர் காக்கும் வேலை என்று பெருமையாக இருந்தது. ஒருமுறை, திருமுல்லைவாயில் அடுத்து வெள்ளனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து அழைப்பு வந்தது. ஒரு கர்ப்பிணிக்கு கொரோனா மூச்சுத்திணறல், குழந்தையையாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, 45 கி.மீ., தாண்டி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தேன். அவருக்கு சுகப்பிரசவம் நடந்தது. அப்பெண்ணின் பாட்டி என்னை கட்டிப்பிடித்து, காலில் விழுந்தார். இப்படி, ஆறு ஆண்டுகள் ஆம்புலன்ஸ் வேலையில், பல இக்கட்டான சூழலை பார்த்து இருக்கிறேன். இந்த வேலையில் இருந்தபடியே, உடற்கல்வி ஆசிரியர் படிப்பை முடிக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு பின், ஓட்டுநர் பயிற்சி பள்ளியுடன் சேர்த்து, ஒரு விளையாட்டு கல்விக்கூடமும் ஆரம்பிக்க வேண்டும். அதன் வாயிலாக, பல பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும். இந்த லட்சியத்தை அடையாமல் ஓய மாட்டேன்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை