உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் /  சரியான இலக்கு இருந்தால் சாதிக்கலாம்!:ரசாயனம் தவிர்த்த தயாரிப்புகள் தான் எங்களது சிறப்பு!

 சரியான இலக்கு இருந்தால் சாதிக்கலாம்!:ரசாயனம் தவிர்த்த தயாரிப்புகள் தான் எங்களது சிறப்பு!

செக்கு எண்ணெய் மற்றும் சிறுதானிய மாவு வகைகளை விற்பனை செய்து வரும், திருச்சி மாவட்டம், கல்லக்குடியைச் சேர்ந்த, 27 வயதான கோபிநாத்: எங்களுடையது நடுத்தரமான விவசாய குடும்பம். எங்கள் வயலில் விளைந்த நிலக்கடலை, எள் ஆகியவற்றில் எண்ணெய் எடுத்து, வீட்டுக்கு பயன்படுத்தியது போக, மீதியை அருகில் உள்ளவர்களிடம் விற்பனை செய்ய ஆரம்பித்தோம். நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த 2018ல், ஆர்.ஜெ.எஸ்., அக்ரோ புராடக்ட்ஸ் என்ற பெயரில் விற்பனை செய்ய ஆரம்பித்தோம். 2021ல் உயிரி தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம் பெற்றேன். வீட்டில் அப்போது பொருளாதார பிரச்னைகள் தலைதுாக்கின. அதனால், முழு நேரமாக தொழிலில் இறங்க முடிவெடுத்து, நான்கு ஊழியர்களை நியமித்தோம். கொரோனா ஊரடங்கில், விவசாயிகளிடம் இருந்து மூலப்பொருட்களை வாங்கி எண்ணெய் தயாரித்து விற்பனை செய்தோம். வங்கியில் கடன் வாங்கி, எண்ணெய் செக்கு ஆலை வைத்து, சமூக வலைதளங்களை பயன்படுத்தி விளம்பரம் செய்தோம். இந்தியா மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். நிறைய கண்காட்சிகளிலும் பங்கேற்று, எங்களுடைய தயாரிப்புகளை மக்களுக்கு கொண்டு சென்றோம். இரு ஆண்டுகளுக்கு முன், மாவு அரைக்கும் இரு இயந்திரங்களை வாங்கி, மாவு வகைகள், பொடி வகைகள் அரைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தோம். சென்னை, கோவை, பெங்களூரைச் சேர்ந்த ஆறு பேர், எங்களிடமிருந்து மொத்தமாக எண்ணெய் மற்றும் மாவு வகைகளை வாங்கி, மறுவிற்பனை செய்கின்றனர். எங்கள் தயாரிப்புகளை சோதனை கூடங்களில் பரிசோதனை செய்து, தரச்சான்றிதழ் பெற்றே விற்பனை செய்கிறோம். தரத்தில் சிறிது கூட சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்பதால், வாடிக்கையாளர்கள் எங்கள் தயாரிப்புகளுக்கு அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். கடந்த ஜனவரியில் ஸ்ரீரங்கம் பகுதியில் கடை திறந்தோம். மாதத்திற்கு கடலை எண்ணெய் 2,000 லிட்டர்; நல்லெண்ணெய் 700 லிட்டர்; தேங்காய் எண்ணெய் 200 லிட்டர்; விளக்கெண்ணெய் 50 லிட்டர் மற்றும் 100 கிலோ அளவிலான மாவு வகைகளை விற்பனை செய்து வருகிறோம். ஆண்டுக்கு 1.25 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. எங்கள் தயாரிப்புகளை பல மடங்காக்கி விற்பனை செய்ய வேண்டும் என்ற வேட்கையுடன் ஓடிக் கொண்டிருக்கிறோம். அடுத்து, சிறுதானியங்களை வைத்து பல உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யலாம் என்ற முயற்சியில் இருக்கிறோம். நம் தொழிலில் நம்பிக்கையும், தெளிவும், இலக்கும் இருந்தால், எல்லா தடைகளையும் கடந்து கண்டிப்பாக சாதிக்க முடியும். என் முன்னேற்றத்திற்கு, பெற்றோர் தான் உறுதுணையாக இருந்து வருகின்றனர். தொடர்புக்கு: 79041 09031

ரசாயனம் தவிர்த்த தயாரிப்புகள் தான் எங்களது சிறப்பு!

இயற்கையான பொருட்களில் சோப்பு கள் மற்றும் அழகு சாதன பொருட்களை, வீட்டிலேயே தயாரித்து விற்பனை செய்து வரும், திருச்சியைச் சேர்ந்த, 26 வயதான கா.வைர வைஷ்ணவி: பி. காம்., மற்றும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். அம்மா, எங்களின் சிறுவயது முதலே, எனக்கும், தம்பிக்கும் தேங்காய் எண்ணெயில் இயற்கையான சோப் தயாரித்து கொடுப்பார். அதை பயன்படுத்திய பின், எங்களுக்கு சரும பிரச்னைகள் நீங்குவதை, கண்கூடாக பார்த்தோம். நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு அம்மா தயாரித்த சோப்பை கொடுத்தபோது, அனைவரும் நன்றாக இருப்பதாகவே கூறினர். அதையடுத்து, மஞ்சள், வேம்பு, உருளை, ஆலிவ், செம்பருத்தி என, பல்வேறு இயற்கை பொருட்களை வைத்து சோப் தயாரிக்க ஆரம்பித்தார்; படிப்பை தொடர்ந்தபடி நானும் அம்மாவுக்கு உதவியாக இருந்தேன். வெறும், 1,000 ரூபாய் முதலீட்டில், 'ஸ்ரீவா ஹோம் மேட் சோப்' என்ற பெயரில், இதை ஒரு வியாபாரமாக ஆரம்பித்தோம். சமூக வலைதளங்களில், குழுக்கள் வாயிலாக அம்மாவின் தயாரிப்புகளை பிரபலப்படுத்தினேன். மெல்ல வாடிக்கையாளர்கள் அதிகரிக்க ஆரம்பித்தனர். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப, 35 வகை சோப்புகள், ஷாம்பு என அடுத்தடுத்த தயாரிப்புகளையும் அம்மா அறிமுகப்படுத்தினார். இதற்கிடையில், 2022ல் படிப்பை முடித்து விட்டு, நானும் தனிப்பட்ட முறையில் அழகு சாதனங்கள் தயாரிப்புக்கான பிரத்யேக பயிற்சிகளை கற்று, அம்மாவுடன் வியாபாரத்தில் இணைந்தேன். அம்மாவின் அனுபவமும், என் பயிற்சியும் வியாபாரத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது. து ணி துவைக்க, பாத்திரம் கழுவ, வீடு துடைக்கும் திரவங்களை தயாரித்து அறிமுகப் படுத்தினோம். இப்போது, 100க்கும் மேலான தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறோம். எங் கள் தயாரிப்புகள் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் செ ல்கின்ற ன. சோப் உறைகளுக்கு, மட்கும் காகிதம், வாசனைக்கு இயற்கையான எண்ணெய் என, முற்றிலும் ரசாயனம் தவிர்த்த தயாரிப்புகள் தான் எங்களது சிறப்பு. மாதத்திற்கு, 30,000 ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. 300க்கும் மேற்பட்ட தொடர் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எங்கள் நிறுவனத்திற்கு, 'வால்மார்ட் விருத் தி' சார்பில் சிறந்த தொழில் முனைவோர் விருதும், அம்மாவுக்கு சிறந்த பெண் தொழில் முனைவோர் விருதும் கிடைத்தன. தற்போது வரை, எல்லா தயாரிப்புகளையும் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல், கைகளில் தான் தயாரிக்கிறோம். வங்கிக் க டன் உதவியுடன், விரைவில் தேவையான இயந்திரங்களை வாங்கி, தொழிலை பெரிதாக்கும் தி ட்டம் இருக்கிறது. தொடர்புக்கு: 91505 13260.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !