உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / உண்மையாக உழைத்தால் எந்த உயரத்தையும் அடையலாம்!

உண்மையாக உழைத்தால் எந்த உயரத்தையும் அடையலாம்!

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பஸ் நிலையம் பகுதியில் உள்ள, 'ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வீட்ஸ் அண்டு ஸ்நாக்ஸ்' கடை உரிமையாளர் ரவி: 'ஆற்காடு இனிப்பகம்' என்ற பெயரில் அப்பா சிறிதாக நடத்தி வந்த கடையில், அவர் மறைவுக்குப் பின் அம்மாவுடன் சேர்ந்து வியாபாரத்தில் உதவ துவங்கினேன்.என் தங்கையர், தம்பியின் எதிர்காலத்துக்காக பள்ளிப்படிப்பை நான்காம் வகுப்புடன் நிறுத்திவிட்டு, முழு நேரமும் வியாபாரத்தை பார்த்துக் கொண்டேன்.என் உழைப்பும், நம்பிக்கையும் வீண் போகவில்லை; வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைத்தது. அதன்பின், தந்தை ஸ்தானத்தில் இருந்து தங்கைக்கு சீரும் சிறப்புமாக திருமணம் செய்து வைத்தேன். எனக்கு உறுதுணையாகவும், ஆறுதலாகவும் இருந்து வந்த என் தாயார், 1993ல் காலமானார்; 1997ல் இரண்டாவது தங்கைக்கு திருமணம் செய்து வைத்தேன். எனக்கு திருமணமாகி, மூன்று மகள்கள் உள்ளனர்.உண்மையாக உழைத்தால் எந்த உயரத்தையும் அடையலாம் என்று கடுமையாக உழைத்தேன். இனிப்பு கடையுடன், பேக்கரி கடையும் துவக்கினேன். அழியாத செல்வம் கல்வி. அதை நான் தவறவிட்டதைப் போல வேறு எவரும் தவறவிடக் கூடாது என்பதற்காக, என்னால் இயன்ற தொகையை ஏழை மாணவர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறேன்.கடந்த 2018ல், சோளிங்கருக்கு அருகில் உள்ள ஒரு அரசு பள்ளியை வண்ணமயமாக்கி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விளையாட்டு மைதானம், பூங்கா, நவீன கழிப்பறை அமைத்துக் கொடுத்திருக்கிறேன்.அப்பா, 1970ல் துவங்கிய இனிப்பகம், இன்று 55 ஆண்டுகளை நெருங்கி விட்டது. இரண்டு கடைகள் இப்போது உள்ளன; 35 பேர் வேலை செய்கின்றனர்.அவர்களை வேலையாட்களாக அல்லாமல், தொழில் வளர்ச்சிக்கு உதவிய கரங்கள் என்றே நினைக்கிறேன். அவர்கள் பாதி பேர் தங்குவதற்கு அறை எடுத்துக் கொடுத்திருக்கிறேன்; மூன்று வேளை உணவும் வழங்குகிறேன்.தினமும், இரண்டு கடைகளுக்கும் சேர்த்து கிட்டத்தட்ட 5,000 வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். எங்கள் கடையில், 110 வகையான இனிப்பு பலகாரங்களை தயாரித்து விற்பனை செய்கிறோம்.தரம், சுவைதான் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம். இந்த ஸ்வீட் கடையின் பெயர், சோளிங்கருக்கே அடையாளமாக மாறியது மிகவும் மகிழ்ச்சி.ஒரு கடையில், ஒரு நாளைக்கு 40,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இரண்டு கடைகளுக்கும் சேர்த்து, மாதம் 20 லட்சம் முதல் 24 லட்சம் ரூபாய் வரை, 'டர்ன் ஓவர்' பார்க்கிறோம்.உற்பத்தி செலவு, மின் கட்டணம், தொழிலாளர்களின் சம்பளம் உள்ளிட்ட செலவுகள் போக, வரும் லாபத்தில்தான் நலத்திட்ட உதவிகளை செய்கிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ