உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / இத்தனை செ.மீ., மழை பெய்யும் என துல்லியமாக கணிக்க முடியாது!

இத்தனை செ.மீ., மழை பெய்யும் என துல்லியமாக கணிக்க முடியாது!

தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர் அமுதா: பெண்கள் பொருளாதார ரீதியாக தங்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், என் பெற்றோர். பி.எஸ்சி., இயற்பியல் பாடத்தை தகுதியாகக் கொண்டு, 'ஸ்டாப் செலக் ஷன் கமிஷன்' தேர்வு எழுதியதன் விளைவாக, வானிலை மையத்தில் பணி கிடைத்தது.வானிலை மையத்தில் பணிபுரிந்த காலகட்டத்தில், குடிமை பணியியல் போட்டித் தேர்வு வாயிலாக வானிலை விஞ்ஞானியாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். பின், பல பதவி உயர்வுகள் கிடைத்தன.'காலநிலை மாற்றம் என்பது தவிர்க்க முடியாத அச்சுறுத்தல்' என்று உலக வானிலை நிறுவனமே தெரிவித்துள்ளது. அதற்கேற்றபடி, நம்மை தகவமைத்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. உதாரணத்திற்கு, வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை 92 நாட்கள் என நாம் வரையறுத்துள்ளோம். ஆனால், தற்போது நான்கு நாட்களில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் கொட்டித் தீர்க்கிறது.துல்லியமாக இவ்வளவு செ.மீ., மழை பெய்யும் என்று கூறுவதற்கான தொழில்நுட்பம், உலகில் எந்த நாட்டிடமும் இல்லை. தனியார் வானிலை ஆய்வாளர்கள், அரசு மற்றும் இணையதளத்தில் கிடைக்கும் வானிலை குறித்த தரவுகளை ஆராய்ந்து, அவர்கள் கருத்துகளை கூறுகின்றனர்.இதன் அடிப்படையிலேயே, பேரிடர் காலத்தில் சமூக வலைதளங்களில் வினாடிக்கு வினாடி அவர்கள் 'அப்டேட்' கொடுக்கின்றனர். ஆனால், எங்கள் அறிவிப்புகள் முழுக்க முழுக்க அதிகாரப்பூர்வமானவை. எங்களுக்கென சில வழிகாட்டு நெறிமுறைகளும், பொறுப்புகளும் உள்ளன. அவற்றின்படியே நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளில், அடுத்த மாதத்திற்கான காலநிலை குறித்த கணிப்புகளை வெளியிடுகிறோம். அதேநேரம் திடீரென ஓரிரு நாட்கள் வெப்பநிலை அதிகரிப்பதற்கு, காற்றின் திசை மற்றும் வேகம், சூரியனின் வெப்பக்கதிர்கள், பூமியிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு, அன்று நிலவும் பசுமை குடில் வாயுக்களின் விகிதம், பூமியின் ஈரப்பதம் உட்பட பல்வேறு காரணிகள் உள்ளன.எங்கள் டில்லி அலுவலகத்தில், இதற்கென முழுமையான தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சூப்பர் கம்ப்யூட்டர் உள்ளது. இந்தியாவிற்கென்று வானிலை குறித்த மென்பொருள் உள்ளது; அதை இன்னும் மேம்படுத்தி வருகிறோம்.பெண்களுக்கு மிகவும் அடிப்படையான முதல் தேவை, கல்வி. எப்படியாவது படித்துவிட வேண்டும் என்பதை மட்டும் பெண்கள் மனதில் கொள்ள வேண்டும். பெண்கள் தங்கள் உழைப்பை செலுத்தி, திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி வந்தால், இன்னும் சில ஆண்டுகளில் பாலின பாகுபாடு நிச்சயம் மறைந்து விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை