உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / ‘வாழ்க்கையை கட்டமைக்க மிகவும் முக்கியம்!’

‘வாழ்க்கையை கட்டமைக்க மிகவும் முக்கியம்!’

மருத்துவ பணியோடு, தினமும் 35 கி.மீ., வார இறுதிகளில் 100 கி.மீ., என சைக்கிள் ஓட்டி, பெண்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டி வரும், தர்மபுரியைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் வானதி செந்தில்: என் பெற்றோர் இருவருமே மருத்துவர்கள் தான். நான் படிப்பில் முதல் மாணவியாக இருந்தாலும், விளையாட்டு மீதும் ஆர்வம் அதிகம். தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., ‘சீட்’ கிடைத்தது. அங்கு படித்த ஐந்தரை ஆண்டுகளும் நிறைய விளையாட வாய்ப்பு கிடைத்தது. தடகளம் மட்டுமல்லாமல், கூடைப்பந்து, கிரிக்கெட் என பல குழுக்களில் விளையாடினேன். புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரியில் முதுநிலை மருத்துவ படிப்பு முடித்து, ஜிப்மர் மருத்துவமனையில் ஓராண்டு வேலை பார்த்த பின், தர்மபுரிக்கே வந்து விட்டேன். அப்பா, தன் ஓய்வு நேரத்தில் 10 கி.மீ., 15 கி.மீ., என குறுகிய கால, ‘சைக்கிளிங்’ செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்வார். முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு சார் தர்மபுரி வந்திருந்தபோது, உள்ளூர் சைக்கிளிங் கிளப்பில் இருப்போருடன், ‘ரைடு’ சென்றார். அந்த குழுவில் நான் மட்டும் தான் பெண். முதன்முறையாக அப்போது தான் 25 கி.மீ., சைக்கிள் ஓட்டினேன். ‘தர்மபுரி பெண்களை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிநடத்தும் ஆர்வமும், ஆற்றலும் உங்ககிட்ட இருக்கு’ என்று அவர் குறுந்தகவல் அனுப்பி இருந்தார். அதன்பின் சைக்கிளிங்கில் முழு மூச்சில் இறங்கினேன். தர்மபுரி சைக்கிளிங் குழுவில் உள்ளவர்களுடன் பயணிக்க ஆரம்பித்தேன். தற்போது தினமும் 25 முதல் 35 கி.மீ., வரை சைக்கிள் ஓட்டுகிறேன். நான் சைக்கிளிங் செல்லும் காணொளிகளை, சமூக வலைதளங்களில் பதிவிடுவதை பார்த்து விட்டு, நிறைய பெண்கள் சைக்கிளிங் செய்ய ஆர்வமாக இருப்பதாக பதிவிடுவர். ‘ஸ்போர்ட்ஸ் கிளப்’ அல்லது, ‘பிட்னெஸ் கிளப்’ மாதிரி துவங்கி, நிறைய பெண்களை இணைத்து, ‘பிட்னெஸ்’ பக்கம் திருப்பணும். ஒரு மருத்துவராக, குழந்தையின்மை, அதிகமான ரத்தப்போக்கு பிரச்னைகளுடன் நிறைய பெண்களை பார்க்கிறேன். அவர்களுக்கு எடை குறைப்பு மற்றும் உடற்பயிற்சி தான் முதன்மையான சிகிச்சை. சீரான மாதவிடாய் சுழற்சி இல்லாத என் தோழியர் சிலருக்கு உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்ததில் இருந்து, எந்த சிகிச்சையும் இல்லாமல் சுழற்சி சீராகி இருக்கிறது. வாழ்க்கையை ஒழுங்குடன் கட்டமைக்க, விளையாட்டு மிகவும் முக்கியம். சொந்த வாழ்க்கையில், வேலையில் நிறைய பிரச்னைகள் இருந்தாலும், சலிப்பான வாழ்க்கையாக இருந்தாலும், விளையாட்டில் கவனம் செலுத்தும்போது அது மிகப்பெரிய மன ஊக்கத்தை தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ