உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / எங்கள் சிப்ஸுக்கு பெயர் வைத்ததே புதிது தான்!

எங்கள் சிப்ஸுக்கு பெயர் வைத்ததே புதிது தான்!

சமூக வலைதளங்கள் வாயிலாக, நேந்திரம் வகை வாழைப்பழ, 'சிப்ஸ்' வகைகள் மற்றும் பல பொருட்களை உலகம் முழுதும் விற்பனை செய்து வரும், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவி லை சேர்ந்த விஸ்வநாதன்: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து விட்டு, சென்னையில் பல கம்பெனிகளில் வேலை பார்த்தேன். என் சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு எப்போது சென்று வந்தாலும், நேந்திரம் சிப்சை வாங்கி வருவேன். அதை, உடன் பணிபுரிவோர் போட்டி போட்டு வாங்கி சாப்பிட்டது எனக்கு முக்கியமான விஷயமாக பட்டது. தவிர, எங்கள் ஊரில், சிப்ஸ் வகைகள் அதிகம். ஒரு நாள் இதுகுறித்து அண்ணனிடம் பேசியபோது, 'சரியாக திட்டமிட்டால் இதை, 'ஆன்லைன் பிசினஸாக' மாற்றலாம் என்றார். உடனே இது குறித்து தேடியபோது, ஊரில், 1 கிலோ சிப்ஸ், 260 ரூபாய். ஆன்லைனில், 900 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். அதுவும் அவர்கள் நாகர் கோவிலில் இருந்து தான் வாங்குகின்றனர். சிப்ஸ் வாங்கி விற்பதை, பகுதி நேரமாக பார்க்க ஆரம்பித்தேன். அப்பாவின் நண்பர், பெரிய அளவில் நேந்திரம் சிப்ஸ் பிசினஸ் செய்கிறார். அவரிடம் பேசிய போது, 'தாராளமாக செய்து தருகிறேன்' என்றார். உடனே, 'வெப்சைட் டிசைன்' செய்து என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்த போது, 'போடா என் சிப்ஸு...' என்று நடிகர் வடிவேலு கூறிய 'காமெடி' பளிச்சென பொருந்தியது. அந்த பெயரையே வைத்து விட்டேன். மற்ற நிறுவனங்களின் விற்பனை விலையை விட, 50 சதவீதம் குறைவாக கொடுத்தேன். பிசினஸ் மெதுவாக 'பிக்கப்' ஆனது. தொடர்ந்து வாடிக்கையாளர் வந்தனர். வேலையும், பிசினசும் நன்றாக சென்ற நேரம், கொரோனா ஊரடங்கு வந்து எல்லாமே முடங்கியது. ஓராண்டு வீட்டில் இருந்தேன். நிலைமை சரியான பின், சுவைகளை அதிகமாக்கி, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொடுத்தேன். ஆனால், 'இவ் வளவு பெரிய செட்டப்பில் ஒரே ஒரு பொருள் மட்டும் தானா' என்ற கேள்வி வந்தது. அதனால், நேந்திரம், செவ்வாழை, முளைகட்டிய ராகி, பேரீச்சை பவுடர்கள் என, குழந்தைகளுக்கான உணவுகளையும் அறிமுகம் செய்தேன்; வரவேற்பு கிடைத்தது. அடுத்து, குமரி மாவட்டத்தின் சிறப்புகளான, மீன் ஊறுகாய்களையும் அறிமுகம் செய்தேன். இப்படி, 20 தயாரிப்புகளை இந்தியா மட்டுமல்லாது, அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கும் விற்பனை செய்கிறேன். இப்போது, 35,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். தென் மாவட்டங்களில் கிடைக்கும், மரபு சார்ந்த எல்லா உணவு களையும் தயாரித்து தர வேண்டும் என்பது என் திட்டம். இன்னும் ஐந்து ஆண்டுகளில் அதை கட்டாயம் நிறைவேற்றுவேன்! தொடர்புக்கு: 96293 92810


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ