இப்போது நான் 55 லாரிகளுக்கு அதிபதி!
லாரி தொழிலில் கோடிகளில் சம்பாதித்து வரும், மாரிமுத்து: சொந்த ஊர் திருநெல்வேலி அருகில் உள்ள முறப்பநாடு கிராமம். தந்தை சிறு வயதில் இறந்து விட்டார். வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. என் சகோதரர்கள் மும்பையில் இருந்ததால், நானும் பிழைப்புக்காக, 1997ல் மும்பை வந்து, மூன்று ேஹாட்டல்களில் பணிபுரிந்தேன். அதன்பின் சைக்கிளில் சென்று தேநீர் மற்றும் காபி விற்பனை செய்ய ஆரம்பித்தேன். இரவு - பகல் பாராமல் தொடர்ந்து கடினமாக உழைத்தேன்.சைக்கிளில் செய்து வந்த தேநீர் வியாபாரத்திலும் போலீஸ் தொந்தரவு இருந்தது. இதனால் வேறு தொழில் செய்வது குறித்து பரிசீலித்து வந்தேன். என் நண்பர்கள், சொந்தமாக லாரி வாங்கி நடத்திக் கொண்டிருந்தனர்.தேநீர் வியாபாரத்தில் சம்பாதித்து சேர்த்த பணம், 80,000 ரூபாய் என்னிடம் இருந்தது. என் நண்பர்கள், 20,000 ரூபாய் கொடுத்து உதவினர். எஞ்சிய பணத்தை கடன் சொல்லி, முதல் லாரியை வாங்கினேன். போராடி, லாரியை மார்க்கெட்டில் நிறுத்த அனுமதி பெற்றேன். என் வீட்டுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர், பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனி குடோனுக்கு லாரி வாயிலாக, 'சப்ளை' செய்து கொண்டிருந்தார். அவர் தனக்கு போக எஞ்சிய வேலை இருந்தால், அதை எனக்கு மாற்றி விடுவார். ஆரம்பத்தில் அந்த நண்பர் மூலம் லாரியை இயக்கிக் கொண்டிருந்தேன்.பின், நானே நேரடியாக அந்த கம்பெனிகளுடன் ஒப்பந்தம் செய்து, அந்த லாரிகளை இயக்க ஆரம்பித்தேன். அதே சமயம் லாரிகளுக்கான தேவையும் அதிகரித்தது. எனவே, அடுத்தடுத்து லாரிகளை வாங்கினேன். அதன் பின், குஜராத்தில் இருந்து வரும், 'அமுல் டெய்ரி' கம்பெனியிடம் தயிர், பால், வெண்ணெய் போன்றவற்றை வாங்கி, மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில், 'சப்ளை' செய்யும் ஒப்பந்தம் கிடைத்தது.லாரிகளை வாங்கியதில் இருந்து, எட்டு ஆண்டுகள் வரை மட்டுமே மும்பைக்குள் இயக்க முடியும். இதனால் லாரிகளை அடிக்கடி வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரே சீராக தொடர்ச்சியாக பழைய லாரிகளை மாற்றி, புதிய லாரி களை விலைக்கு வாங்கினேன். இதுவரை, 200க்கும் அதிகமான லாரிகளை வாங்கி இருக்கிறேன். தற்போது எங்களிடம், 55 லாரிகள் ஓடுகின்றன. 'குடோன்'களில் இருந்து பொருட்களை எடுத்து சென்று, 'சூப்பர் மார்க்கெட்'டுகளில் வழங்குகிறோம். கம்பெனிகள் சொன்ன நேரத்துக்கு சரியாக நாங்கள் லாரிகளை அனுப்புவதால், எங்கள் மீது கம்பெனிகள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றன.தற்போது சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும், 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனங்கள் அதிகரித்து வருவதால், லாரிகளின் தேவையும் அதிகரித்து வருகிறது. என்னிடம் இருக்கும், 55 லாரிகளை, விரைவில், 100 லாரிகளாக அதிகரிக்க வேண்டும் என்பதே என் இலக்கு.