உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் /  சத்தான உணவும் நிம்மதியான வாழ்வும்!

 சத்தான உணவும் நிம்மதியான வாழ்வும்!

இயற்கை வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும், கோவை மாவட்டம், மெட்டுவாவி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து: இதுதான் எங்கள் பூர்வீக கிராமம். நாங்கள் விவசாய குடும்பம். பாசனத்துக்கு போதுமான தண்ணீர் கிடைக்காததாலும், சரியான விளைச்சல் இல்லாததாலும், குடும்பத்தின் அன்றாட ஜீவனத்துக்கே கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால், 1992ல் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் அப்பா வேலைக்கு செல்ல ஆரம்பித்தார். குடும்ப வறுமை காரணமாக, ஐந்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய நானும், அவருடன் சேர்ந்து பின்னலாடை நிறுவனத்துக்கு வேலைக்கு செல்ல துவங்கினேன். இந்த நிலையில், 2008ல் எங்கள் நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து, அப்பா விவசாயம் செய்ய ஆரம்பித்தார். என் அப்பா, 2017ம் ஆண்டு, 88 சென்ட் நிலத்தை எனக்கு கொடுத்தார். நானும் வேலையை விட்டுவிட்டு, நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து, 2019 முதல் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். 60 சென்ட் பரப்பில் காய்கறிகள் பயிர் செய்கிறேன். மீதி உள்ள, 28 சென்ட் பரப்பில் வீடு, மாட்டு கொட்டகை, கால்நடைகளுக்கான மேய்ச்சல் பகுதி உள்ளிட்டவை அமைத்துள்ளேன். தவிர, ஐந்து நாட்டு மாடுகள் வளர்க்கிறேன். அடுத்து ஆடுகளும், நாட்டு கோழிகளும் வாங்கி வளர்க்க போகிறேன். எங்கள் தேவைக்கு போக, கூடுதலாக மாட்டு பால் இருந்தால், அதில் வெண்ணெய், நெய், பனீர் உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்து, விற்பனை செய்கிறேன். மாட்டு தீவனத்துக்கான செலவுகள் போக, ஆண்டுக்கு குறைந்தபட்சம், 25,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது. காய்கறிகள் மற்றும் கீரை வகைகளும் பயிர் செய்கிறேன். இது வறட்சியான பகுதி; அதனால், சொட்டுநீர் பாசனம் அமைத்திருக்கிறேன். 60 சென்ட் பரப்பில் வாரத்துக்கு குறைந்தபட்சம், 300 கிலோ காய்கறிகளை விளைவித்து, நேரடியாக விற்பனை செய்கிறேன். வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கும் நேரடியாக சென்று கொடுக்கிறேன். வாரத்துக்கு, 15,000 முதல் 18,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. செலவுகள் போக, வாரத்துக்கு சராசரியாக, 7,500 ரூபாய் லாபம் வீதம், ஒரு மாதத்திற்கு 30,000 ரூபாய் லாபம் கிடைத்து வருகிறது. இந்த அடிப்படையில் கணக்கு பார்த்தால், ஆண்டுக்கு, 3.60 லட்சம் ரூபாய் லாபம் பார்த்து வருகிறேன். என்னை பொறுத்த வரை, இது நிறைவான லாபம். எனக்கு சத்தான உணவும், நிம்மதியான வாழ்க்கையும் கிடைக்கிறது. தொடர்புக்கு: 90807 39280.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை