எங்களின் கருவாடு சம்பல், பேமஸ்!
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சி மடம் மெயின் ரோட்டில், 'பட்டறை கருவாடும், பழைய கஞ்சியும்' என்ற பெயரில், உணவகத்தை நடத்தி வரும், மாற்றுத்திறனாளி அந்தோணி தினா: நான் சிறுவனாக இருந்த காலத்தில், எங்கள் அப்பத்தா, பெரிய வகை மீன்களான, நெய் மீன் எனப்படும் சீலா, விளை மீன், பாறை, கட்டா, கொடுவா போன்றவற்றை கருவாடாக உருவாக்கி, எங்களுக்கு உணவாக தருவார். காலப்போக்கில் அந்த உணவு முறைகள் வழக்கொழிந்து போயின. கைவிடப்பட்ட அந்த பாரம்பரிய உணவு முறையை, மீண்டும் கையில் எடுத்தால் என்ன என்ற எண்ணம் உருவானது.மீனவர்கள் துாண்டில் வாயிலாக பிடிக்கும், சராசரியாக, 10 கிலோ எடைக்கு மேல் இருக்கும் பெரிய வகை மீன்களை, இரண்டாக கீறி, அதனுள் இருக்கும் கழிவுகளை நீக்கி, சுத்தம் செய்ய வேண்டும். அதன் பின், மஞ்சள், கல் உப்பு ஆகியவற்றை கலந்து, மீனின் உடலுக்குள் வைத்து மூடி, சணல் சாக்கில் நன்றாக சுற்றி, அதை பனை ஓலை பாயில் வைத்து கட்டி, கடற்கரை மணலில், 3 அடி ஆழத்தில், குழி தோண்டி புதைத்து வைத்து, 10 நாட்கள் காத்திருக்க வேண்டும். பின், அந்த மீனை தோண்டி எடுத்தால், அது சுவையான கருவாடாக மாறி இருக்கும்.இவ்வாறு மாற்றப்பட்ட நெய் மீன் கருவாட்டை, துண்டு துண்டாக வெட்டி, தக்காளி, வெங்காயத்துடன் சேர்த்து வதக்கி எடுத்தால், கருவாட்டு சம்பல் தயாராகி விடும். இதை, நாங்கள் செய்முறையாக செய்ததை, மொபைல் போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டோம்; அன்றிலிருந்து, பட்டறை கருவாட்டிற்கென தனி மவுசு ஏற்பட்டு விட்டது.ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணியர், எங்கள் உணவகத்துக்கு அதிக அளவில் வருகின்றனர். இவர்களுக்கு, பாரம்பரிய முறையிலான, மண் பானையில் முதல் நாளில் வடித்து எடுத்த பழைய கஞ்சியையும், அதற்கு தொட்டுக்கொள்ள பட்டறை கரு வாட்டையும் தருகிறோம்.இது தவிர, பட்டறை கருவாடு மற்றும் அதன் வாயிலாக செய்யப்படும் தொக்கு, சம்பந்தி, நெத்திலி பொரியல் ஆகியவற்றையும் விற்பனை செய்வதுடன், 'ஆர்டர்' கொடுப்பவர்களுக்கு, 'டோர் டெலிவரி'யும் செய்கிறோம். அந்த வகையில், தமிழகத்தில் முக்கிய நகரங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வருகிறோம்.இவ்வாறு வாங்கி செல்லப்படும் கருவாடு களை, காற்று புகாதபடி, டப்பாக்களில் அடைத்து, 'பிரிஜ்'ஜில் வைத்து, 15 நாளைக்கு ஒரு முறை, அதை வெளியில் எடுத்து காய வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால், மூன்று ஆண்டுகள் வரை கருவாடு கெட்டுப்போகாது.மாற்றுத்திறனாளியான நான், வேலை தேடிச் சென்ற இடங்களில், சில கசப்பான அனுபவங்கள் நேர்ந்தன. அத்தகைய சம்பவங்கள் என்னை போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக, நான்கு மாற்றுத்திறனாளிகளுக்கு, இந்த உணவகம் மூலம் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளேன்!