எண்ணெய் பனை சாகுபடி வாயிலாக ரூ.25 லட்சம் லாபம்!
எண்ணெய் பனை (பாமாயில்) சாகுபடியில் வெற்றிகரமாக லாபம் பார்த்து வரும், தஞ்சை மாவட்டம், வடக்கூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காத்தலிங்கம்:எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரம் விவசாயம் தான். சிறு வயதில் இருந்தே அதில் தான் ஆர்வம். அதனால், அப்பாவிற்கு உதவியாக விவசாயத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.முழுமையாக கவனிக்க ஆரம்பித்த பின், சாகுபடி பரப்பை விரிவுபடுத்துவதற்காக, அரசு ஒப்பந்த கட்டுமானப் பணிகள் எடுத்து செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதன் வாயிலாக கிடைத்த வருமானத்தை வைத்து நானும், என் தம்பியும் சேர்ந்து, 20 ஏக்கர் நிலம் வாங்கி, மரவள்ளி, சூரியகாந்தி, நிலக்கடலை, கரும்பு உள்ளிட்ட பலவித பயிர்களை சாகுபடி செய்தோம். அதில் சில இடர்பாடுகள் ஏற்பட்டன.அப்போது தான், பக்கத்து ஊர் விவசாயி ஒருவர், 'அதிக பராமரிப்பு இல்லாமல், நல்ல விளைச்சல் கொடுக்கிற எண்ணெய் பனை மரங்களை சாகுபடி செய்யுங்கள்' என கூறினார்.மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தக்கூடிய, 100 சதவீதம் மானிய திட்டத்தில், 'கோத்ரெஜ் அக்ரோ வீட்' என்ற நிறுவனம் கன்றுகள் நடவு செய்து கொடுத்தாங்க. எண்ணெய் பனையில் ஊடுபயிர் சாகுபடி செய்ய நிலக்கடலையும், உளுந்தும் சிறப்பானவை.எண்ணெய் பனை கன்றுகள் நடவு செய்ததில் இருந்து, மூன்று ஆண்டுகள் வரை இந்த ரெண்டு பயிர்களை மட்டும் தான் ஊடுபயிர்களாக சாகுபடி செய்தேன். கன்றுகள் நடவு செய்ததில் இருந்து, நான்காவது ஆண்டு மகசூல் கிடைக்க ஆரம்பித்தது.இந்த ஆண்டு எண்ணெய் பனையின் பழங்களுக்கு, 1 டன்னுக்கு 13,650 ரூபாய் உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. சந்தை விலை, இதை விடக் குறைவாக இருந்தால், அதனால் ஏற்படும் இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு கொடுத்து விடும்.ஆண்டு முழுக்க பழங்கள் கிடைக்கின்றன. 15 நாட்களுக்கு ஒரு முறை பழங்கள் அறுவடை செய்கிறேன். ஆண்டுக்கு, 1 ஏக்கருக்கு சராசரியாக, 12 டன் பழங்கள் மகசூல் கிடைக்கும். 1 டன் 13,650 ரூபாய் என விற்பனை செய்வதன் வாயிலாக, ஏக்கருக்கு 1,63,800 ரூபாய் வருமானம் கிடைக்கும்.அறுவடைக் கூலி, போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்கு 12,200 ரூபாய்; பராமரிப்புப் பணிகளுக்கு 24,000 ரூபாய் செலவாகும். எல்லா செலவுகளும் போக, 1 ஏக்கருக்கு 1.27 லட்சம் ரூபாய் வீதம், 20 ஏக்கர் எண்ணெய் பனை சாகுபடி வாயிலாக, ஆண்டுக்கு 25.52 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.தொடர்புக்கு: 90471 15096