உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / மஞ்சள் பொடி விற்பனையில் ரூ.5.50 லட்சம் லாபம்!

மஞ்சள் பொடி விற்பனையில் ரூ.5.50 லட்சம் லாபம்!

மஞ்சள் உற்பத்தி செய்து, அதை பொடியாக்கி விற்பனை செய்து நிறைவான லாபம் ஈட்டும், மஹாராஷ்டிர மாநிலம், அஹமத் நகர் மாவட்டம், லோனி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் கோகரே - அனிதா தம்பதி: சஞ்சய் கோகரே: எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான, 5.5 ஏக்கர் நிலத்தில், 15 ஆண்டுகளுக்கு முன் கரும்பு, சோயாபீன்ஸ், வெங்காயம் போன்ற பயிர்கள் மட்டும் சாகுபடி செய்தோம். முதலீட்டுக்கும், உழைப்புக்கும் ஏற்ற லாபம் கிடைக்காததால், புதிதாக ஏதேனும் ஒரு மாற்று பயிரை சாகுபடி செய்து பார்க்கலாம் என்று, சிறிய பரப்பில் மஞ்சள் சாகுபடி செய்தோம். அதில், நல்ல விளைச்சல் கிடைத்தது. அறுவடை செய்த மஞ்சள் கிழங்குகளை அவித்து, காய வைத்து, தோல் நீக்கி பாலீஷ் செய்து அரைத்ததில், 5 கிலோ பொடி கிடைத்தது. அதை உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விற்பனை செய்ததில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் மஞ்சள் சாகுபடி பரப்பை அதிகப்படுத்தினோம். விதைத்ததில் இருந்து, 10வது மாதம் மஞ்சள் கிழங்குகள், அறுவடைக்கு தயாராகும். மஞ்சள் பொடி தயார் செய்ய, நவீன இயந்திரங்களை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் அளவுக்கு எங்களிடம் வசதி இல்லை. எனவே, மஞ்சள் கிழங்குகளை வேக வைக்கும் இயந்திரம், தோல் நீக்கி பாலீஷ் செய்யும் இயந்திரம் ஆகியவற்றை வாடகைக்கு எடுத்து பயன் படுத்தினோம். பெரு நிறுவனங்கள் விற்பனை செய்யும் மஞ்சள் பொடிக்கு நிகரான தரத்தில், எங்களாலும் தயார் செய்ய முடிந்தது. இதை நவீன முறையில் வசீகரமாக பேக்கிங் செய்ய, தொண்டு நிறுவனம் ஒன்றில் பயிற்சி எடுத்தோம். 2014ம் ஆண்டு எங்கள் மஞ்சள் பொடியை, 'சாய்சாகர் ஆர்கானிக் மஞ்சள் பவுடர்' என்ற பெயரில் சந்தையில் அறிமுகம் செய்தோம். ஆர்கானிக் மஞ்சள் பொடி என்பதால் டில்லி, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆர்டர்கள் வரத் துவங்கின. அனிதா: மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாயிலாகவும், மஞ்சள் பொடியை விற்பனை செய்து வருகிறோம். மத்திய - மாநில அரசுகளின் சார்பில் நடத்தப்படும் கண்காட்சிகளில், எங்கள் மஞ்சள் பொடியை காட்சிப்படுத்தி விற்பனை செய்கிறோம். 1 கிலோ மஞ்சள் பொடியை, 300 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். 1 ஏக்கரில் கிடைக்கும் மஞ்சளை உலர்த்தினால், 3 டன் கிடைக்கும். அதை அரைத்தால், 2.5 டன் பொடி கிடைக்கும். மஞ்சள் பொடி விற்பனை வாயிலாக, ஆண்டுக்கு, 7.50 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. சாகுபடி, மதிப்பு கூட்டல் உள்ளிட்ட செலவுகள் போக, குறைந்தபட்சம், 5.50 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை