மேலும் செய்திகள்
இந்த காடு நீடித்து நிலைத்திருக்கும்!
01-Dec-2024
காளான் வளர்ப்பில் கணிசமாக லாபம் ஈட்டும், திருநெல்வேலி மாவட்டம், வடக்கன் குளம் கிராமத்தைச் சேர்ந்த சுஜாதா மதன்: என் சொந்த ஊர், இதே மாவட்டத்தில் உள்ள கள்ளிகுளம். பி.எஸ்சி., - பி.எட்., படித்து, தனியார் பள்ளிகளில் 10 ஆண்டு ஆசிரியை வேலை பார்த்தேன். திருமணமாகி, கணவர் வீட்டுக்கு வந்த பின், குழந்தைகளுக்கான பிளே ஸ்கூலும், பரதநாட்டிய பள்ளியும் நடத்தி வருகிறேன்.துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கள்ளிகுளம் வேளாண்மை கல்லுாரியில், மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த காளான் வளர்ப்பு பயிற்சியில், சிப்பி காளான் மற்றும் பால் காளான் வளர்ப்புக்கு தேவையான தொழில்நுட்பங்களை துல்லியமாகவும், விரிவாகவும் சொல்லிக் கொடுத்தனர்.'இது, குறைவான பராமரிப்பில், அதிக லாபம் தரக்கூடிய தொழில். இல்லத்தரசிகளுக்கு ஏற்ற தொழில்' என பலர் கூறியதால், இதில் இறங்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். எங்கள் பகுதியில், ஏற்கனவே இந்த தொழிலில் ஈடுபட்டு இருப்போரின் காளான் வளர்ப்பு கூடாரத்துக்கு சென்று, காளான் உற்பத்திக்கான பைகள் தயார் செய்யும் முறையையும், அங்கு கடைப்பிடிக்கப்படும் பராமரிப்பு முறைகளையும் நேரடியாக பார்வையிட்டேன்.அவர்களிடமிருந்து, 10 பைகள் வாங்கி, அங்கு சில மாதங்கள் காளான் வளர்ப்பில் ஈடுபட்டேன். பராமரிப்பு பணிகளை நானே செய்தேன். தொடர்ச்சியாக பல முறை வெற்றிகரமாக அறுவடை செய்ததால், இதில் எனக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டது.அதனால், நானே சொந்தமாக காளான் வளர்ப்புக்கூடம் அமைத்தேன். அதில் கிடைக்கும் காளான்களை, காய்கறி, மளிகைக் கடைகள், இயற்கை அங்காடிகள், சூப்பர் மார்க்கெட்களுக்கு வினியோகம் செய்கிறேன். சிப்பி காளானை பொறுத்தவரை, அறுவடை செய்த அன்றே விற்பனை செய்தாக வேண்டும். ஆனால், பால் காளான் அப்படி அல்ல... ஒரு வாரம் வரை வைத்து கூட விற்பனை செய்யலாம். இதற்கு ஏற்றபடி அறுவடையில் கவனம் செலுத்துவேன். ஒரு மாதத்திற்கு, 250 கிலோ சிப்பி காளான் அறுவடை செய்கிறேன். 1 கிலோ 250 ரூபாய் வீதம், 62,500 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. பால் காளான் ஒரு மாதத்திற்கு, 100 கிலோ கிடைக்கிறது. 1 கிலோ 300 ரூபாய் வீதம் 30,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இரண்டையும் சேர்த்து மாதத்திற்கு 92,500 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. வைக்கோல், காளான் விதைகள், பைகள், பணியாளர்கள் சம்பளம் உள்ளிட்ட எல்லா செலவுகளும் போக, ஒரு மாதத்திற்கு, 62,500 ரூபாய் லாபம் கிடைக்கிறது. மதிப்பு கூட்டும் முயற்சியாக, சிப்பி காளானில் ஊறுகாய் தயாரிப்பை துவங்கி உள்ளேன். அடுத்து, காளான் சூப் பவுடர் தயாரிக்கும் யோசனையும் உள்ளது.
01-Dec-2024