உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / 110 ஆண்டுகளாக இயங்கும் சாத்துார் சேவு கடை!

110 ஆண்டுகளாக இயங்கும் சாத்துார் சேவு கடை!

விருதுநகர் மாவட்டம், சாத்துாரில், 110 ஆண்டு களாக இயங்கி வரும், மு.சே.சண்முக நாடார் காராசேவு கடையின், நான்காவது தலைமுறை உரிமையாளர் சண்முகநாதன்: காராசேவு என்பது, குஜராத் மாநிலத்தில் தோன்றிய ஒரு சிற்றுண்டி. 1914ல் இருந்து எங்கள் குடும்பம் சேவு தயாரிக்கும் தொழில் செய்து வருகிறது. என் தாத்தாவுடைய அப்பா தான் இதை ஆரம்பித்தார். 2018 வரை குடிசை தொழிலாகத் தான் இருந்தது. மூன்றாவது தலைமுறையான பெரியப்பா மற்றும் அவரது மகன், நான் மற்றும் எங்கப்பா அனைவரும் சேர்ந்து தான் இதை, 'பிரைவேட் லிமிடெட் கம்பெனி'யாக பதிவு செய்தோம். இப்போது எங்களிடம், 100 பேர் வேலை பார்க்கின்றனர். மற்ற சேவில் இருந்து எங்கள் கடை சேவை வேறுபடுத்தி காட்டுவது எதுவென்றால், பூண்டு, வரமிளகாய், பெருங்காயம் சுவைகள் கொஞ்சம் துாக்கலாக இருக்கும். சாத்துார் மக்கள் வெளியூர் சென்றாலும், சாத்துாருக்கு அவர்கள் வீட்டுக்கு எவராவது வந்தாலும், வாங்குவது எங்கள் கடை சேவு தான். எங்கள் தொழிலில் இரண்டு விஷயங்கள் மிக முக்கியம்... ஒன்று, தரத்தை எக்காரணம் கொண்டும் கு றைத்துக் கொள்ளக் கூடாது. அடுத்து, ஆண்டுக்கு, 25 சதவீதம் வரை வளர்ச்சி இருக்க வேண்டும். சாத்துாரிலேயே எங்களுக்கு மூன்று இடங்களில் கடைகள் இருக்கின்றன. சமூக வலைதளங்கள் வாயிலாகவும் விற்பனை செய்து வருகிறோம். கன்னியாகுமரி முதல் வடக்கே ஜம்மு - காஷ்மீர் மாநிலம் வரை எங்கள் சேவு விற்பனை ஆகிறது. வெளி நாடுகளில் இருந்தும் வாங்குகின்றனர். குறிப்பாக, துபாய், கத்தார், அமெரிக்கா, மலேஷியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட, 11 நாடுகளுக்கும் அனுப்பி வருகிறோம். சாத்துாருக்கு வெளியே மற்ற ஊர்களில், பொது இடங்களில் எவராவது எங்கள் சேவை சாப்பிடுவதை பார்க்கும்போது, மிக சந்தோஷமாக இருக்கும். அடுத்ததாக, 400 பேரை வேலைக்கு எடுக்கும் அளவுக்கு தொழிலை வளர்க்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் , எங்கள் சேவு, 110 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனை ஆகி வருகிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் வாடிக்கையாளர்கள் தான். அதனால், அவர்கள் கூறும் பாராட்டுகள் மட்டுமல்ல... ஏதாவது குறைகள் இருந்து அதை கூறினாலும் பொறுப்பேற்று சரிசெய்கிறோம். அது மிகவும் முக்கியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

KOVAIKARAN
செப் 05, 2025 07:52

நான் தற்சமயம் கோவையில் வசிக்கிறேன். இதற்கு முன்பு கல்கத்தா, பம்பாய், சென்னை போன்ற நகரங்களில் பனி புரிந்து வந்தேன். எங்களது உறவினர்கள் கோவில்பட்டி, விருதுநகர், மற்றும் சாத்தூரில் உள்ளனர். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேல் நான் இவர்கள் கடையில் தான் சேவு வாங்குவேன். ஐந்து கிலோவிற்கு குறையாமல் வாங்கிச் சென்று, இது சாத்தூர் சேவு என்று கூறி, என்னுடைய நண்பர்களுக்கு கொடுப்பேன். அவர்கள் சாப்பிட்டுப் பார்த்து, நான் மறுபடியும் சாத்தூர் சென்றால், மீண்டும் வாங்கிவரும்படி சொல்வார்கள். நாங்கள் சில வருடங்களுக்கு முன், அமெரிக்காவில் வசிக்கும் எங்களது மகனைப் பார்க்கச் சென்றபோது, என் உறவினர் ஒருவர் மூலம் இவர் கடையிலிருந்து சேவு வாங்கிச் சென்றேன். அங்கே உள்ள எங்கள் மகனின் அமெரிக்க நண்பர்களும் இதை ருசி பார்த்து பாராட்டினார்கள். ஒருமுறை இவர்கள் கடையில் சேவு வாங்கினார்கள் என்றால், வேறு கடைக்கு செல்லமாட்டார்கள். நிறுவன உரிமையாளர்களுக்கும் அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கும் என்னுடைய அன்பார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் சேவை மேலும் பல நூறு ஆண்டுகள் தொடர வாழ்த்துகிறேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை