வெற்றிக்கு காத்திருப்பு அவசியம்!
'அட்சயா கார்மென்ட்ஸ்' என்ற பெயரில், தையல் தொழில் நடத்தி வரும், திருச்சி மாவட்டம், உறையூரைச் சேர்ந்த சசிகலா: எனக்கும், கணவருக்கும் சொந்த ஊர் கரூர் மாவட்டத்தில் உள்ள சோமூர். கணவர் டிரைவராக உள்ளார். நான், பக்கத்தில் உள்ள கார்மென்ட்ஸ்களில் தையல் வேலைக்கு சென்றேன். 15 ஆண்டுகளாக அந்த வேலையை பார்த்ததால், அனைத்து வகை ஆடைகளையும் தைக்க கற்றுக் கொண்டேன். 'சொந்தமாக தையல் தொழில் துவங்கலாமா' என்று கணவரிடம் கேட்டேன்; உடனே உற்சாகப்படுத்தினார்.கடந்த, 2006ல், 20 தையல் இயந்திரங்களுடன், தொழிலை துவங்கினேன். ஒருவர் கரூரில் இருந்து, வீட்டு உபயோகத் துணிகள் தைப்பதற்கு, ஆர்டர்கள் பெற்றுக் கொடுத்தார். அவற்றின் வாயிலாக, எட்டு மாதங்களில் தொழில், 'பிக்கப்' ஆனது; ஆனால், அவர் உரிய நிறுவனங்களிடம் இருந்து, பணத்தை வாங்கித் தராததால், 5 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.பொதுவாக இதுபோன்ற சூழலில் வீட்டில் உள்ளோர், 'உனக்கு இதெல்லாம் தேவையா... போய் அடுப்படி பொழப்பைப் பாரு' என்று திட்டி முடக்கியிருப்பர். ஆனால் என் கணவர், 'உன்னால் முடியும்; தொழிலை தொடர்ந்து நடத்து' என்று நம்பிக்கை கொடுத்தார். கணவர் உதவியுடன், சிறிது சிறிதாக கடனை அடைத்து, தொழிலை தொடர்ந்தேன்.பஜாரில் உள்ள ரெடிமேட் கடைகளை அணுகி, 'ஆர்டர்'கள் கேட்டேன். அதனால் ஆர்டர்கள் குவிந்தாலும், புதுக் கடைகளில் தொகையை, 'பெண்டிங்' வைத்ததால், ஒன்றரை ஆண்டில் தொழிலில் மீண்டும் நஷ்டம். அப்போதும் கணவர், 'மாற்று வழியை கண்டுபிடி' என்று நம்பிக்கை கொடுத்தார். அதனால், பணத்தை சரியாக தந்த கடைகளுக்கு மட்டும் தொடர்ந்து துணிகள் தைத்துக் கொடுத்து, நஷ்டத்தை ஈடு செய்தேன். அதன் பின், 'அட்சயா டெய்லரிங்' என்று கடை ஆரம்பித்து, பிளவுஸ், சுடிதார் என்று தைக்க ஆரம்பித்தேன். இப்போது, 200 வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். 'டெலிவரி' கூறிய நேரத்திற்கு இருக்கும் என்பதால், கூடுதல் ஆர்டர்களை எடுப்பதில்லை. ரெடிமேட் ஆடைகள், 'ஆன்லைன் ஷாப்பிங்' போன்றவற்றால், டெய்லரிங் தொழிலுக்கு தொய்வான நிலை தான் என்றாலும், தொடர் வாடிக்கையாளர்கள், ஆர்டர் கொடுக்கும் கார்மென்ட்ஸ் இருப்பதால், தொழில் தடையின்றி நடக்கிறது.ஊழியர்களுக்கு, 'பீஸ் ரேட்' அடிப்படையில் சம்பளம் தருகிறேன். அதிகபட்சமாக மாதம், 22,000 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். எனக்கும் கைநிறைய வருமானம் கிடைக்கிறது. தொழிலில் உடனடி வருமானத்தை எதிர்பார்த்தால் லாட்டரி சீட்டு தான் வாங்க வேண்டும். தொழிலில் லாபம் எடுக்கும் வரை, மீனை பிடிக்க ஒற்றைக்காலில் நிற்கும் கொக்குபோல், கடும் உழைப்பை கொட்டிக் காத்திருக்க வேண்டும்!