வீட்டுக்குள் முடங்கியோருக்கு வாய்ப்பு கிடைக்கும்!
தன் மகனுக்கு மறுக்கப்பட்ட உரிமைக்காக போராடி, பலருக்கும் வெளிச்சம் காட்டியுள்ள திருச்சியைச் சேர்ந்த பத்மா: நானும், எழிலும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். 2003ல் சச்சின் பிறந்தான். வளர வளர அவனுக்கு, 'ஆட்டிசம்' என மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். வீட்டுச்சூழலை அவனுக்கு ஏற்ப மாற்றினோம். எல்லாரும் படிக்கும் பள்ளியில் படிக்க வைத்தோம். விளையாட்டில் அவனுக்கு நிறைய ஆர்வம் இருந்தது. கூடைப்பந்தில் நேஷனல் வரைக்கும் போனான். சிறப்பு குழந்தைகளுக்கான ஒலிம்பிக் கேமிலும் விளையாடினான்.சச்சினுக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்ததால், அது சார்ந்த ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் சேர்க்க நினைத்தோம். 2016ல் கொண்டு வரப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டத்தின்படி, ஆட்டிசம் உள்ளிட்ட 21 மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வியில் 5 சதவீதம், வேலைவாய்ப்பில் 4 சதவீத இடஒதுக்கீடு இருக்கிறது.அந்த அடிப்படையில், 2023 ஜூனில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பி.பி.இ.எஸ்., படிப்புக்கு விண்ணப்பித்தோம். 'மாற்றுத்திறனாளிகளை சேர்ப்பது இல்லை' என, அங்கு கூறி விட்டனர்.அரசே உத்தரவிட்டும், அரசு பல்கலைக்கழகம் மறுக்குதே என்று ஆதங்கமாக இருந்தது. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்துக்கு சென்று முறைப்படி புகார் செய்தேன். அவர்கள், இதை ஒரு வழக்காக பதிவுசெய்து விசாரிக்க ஆரம்பித்தனர். இதற்கிடையில், திருச்சியில் உள்ள கல்லுாரி ஒன்றில் இடம் கிடைக்கவே சச்சினை அங்கு சேர்த்து விட்டோம்.ஆனாலும், ஸ்போர்ட்ஸ் யுனிவர்சிட்டிக்கு ஆர்.டி.ஐ., போட்டு, 'உங்க அட்மிஷன் கைடுலைன் என்ன?' என்று கேட்டேன். அவர்கள் அனுப்பிய கைடுலைனில், 'மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு உண்டு' என்று இருந்தது. அதன்படி ஏன் அட்மிஷன் தரவில்லை என்று கேட்டதற்கு, பதில் அனுப்பவில்லை.இதற்காக, திருச்சியில் இருந்து வாரந்தோறும் சென்னை வருவேன். இது குறித்த அலுவலர்களை தொடர்ந்து பார்ப்பேன். இறுதியாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் இருந்து தமிழகத்தின் 19 அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு கடிதம் அனுப்பினர். எல்லா நிறுவனங்களும் சட்டத்தை சரியாக புரிந்து செயல்படுத்த வேண்டும். தங்கள் விபர குறிப்பிலேயே இந்த இடஒதுக்கீடு குறித்து தெரிவிக்க வேண்டும். முறையாக இடஒதுக்கீடு தர வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறியிருந்தனர்.சச்சின் தற்போது இரண்டு செமஸ்டர் முடித்து விட்டான். இனி, கல்லுாரி மாற்றும் திட்டம் இல்லை. ஆனால், இப்படி ஒரு இடஒதுக்கீடு இருக்கிறது என்று பலருக்கு தெரியவில்லை. அதனால், பலர் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களுக்கு இதன் வாயிலாக விழிப்புணர்வும், வாய்ப்பும் கிடைத்தால் போதும்.