மேலும் செய்திகள்
கிரிவலப்பாதையில் பசுமை பற்றிப்படரும்
02-Jun-2025
டீக்கடை தொழிலுடன், இலவசமாக மரக்கன்றுகள் வழங்கி வரும், புதுக்கோட்டை மாவட்டம், அம்மன்குறிச்சியைச் சேர்ந்த பட்டதாரி குமார்: நாங்கள் விவசாய குடும்பம். 50 ஆண்டுகளுக்கு முன் விவசாயம் பொய்த்துப் போனதால், தாத்தா டீக்கடை ஆரம்பித்திருக்கிறார். நான் பி.காம்., முடித்ததும், பல இடங்களில் பணிபுரிந்தேன்; எந்த வேலையிலும் திருப்தி இல்லை.'யாரிடமோ கைகட்டி வேலை பார்ப்பதற்கு, நம் கைவசம் இருக்கும் டீ தொழிலில் இறங்குவது தவறில்லை' என, டீக்கடையில் கடுமையாக உழைக்க ஆரம்பித்தேன். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. தாத்தா உயிருடன் இருந்தவரை, டீக்கடையில் பயன்படுத்தப்படும் டீத்துாள், ஆயில், கடலை மாவு ஆகியவற்றின் பிளாஸ்டிக் காலி கவர்களில் மண்ணை கொட்டி, அதில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து, எங்கள் நிலத்தில் நட்டு வளர்த்தது நினைவுக்கு வந்தது. நானும் அதேபோல் செய்ய ஆரம்பித்தேன். அருகில் உள்ள வயல்களுக்கு சென்று, பலவகையான மர விதைகள், பழ விதைகளை சேகரித்து பதியம் போடுவேன். டீத்துாளை ஒரு வாரம் காய வைத்து, உரமாக பயன்படுத்துவேன். 20 நாட்களில் செடிகள் தயாராகிவிடும். எப்போதும், கடையில் 150 மரக்கன்றுகளுக்கு குறையாமல் வைத்திருப்பேன். மரக்கன்றுகளை விரும்பிக் கேட்கும் நபர்களுக்கு மட்டுமே, 'கண்தானம் போல, மரக்கன்று தானம்' என்று கூறி இலவசமாக கொடுக்க ஆரம்பித்தேன். முதலாமாண்டு 1,000 மரக்கன்றுகள் வழங்கினேன். அதிகபட்சம் ஒருவர், 10 மரக்கன்றுகள் வரை வாங்கிச் செல்வார். உள்ளூரை சேர்ந்தவர்கள் மரக்கன்றுகளை வாங்கிச் சென்று ஊன்றியதும், அந்த பிளாஸ்டிக் கவர்களை மீண்டும் கொண்டுவந்து தருவர். 'பிளாஸ்டிக்கை ஒழிக்கவும், மரங்கள் வளர்க்கவும் இவ்வளவு மெனக்கெடுற உனக்கு ஏதோ எங்களால் முடிந்த உதவி' என்று கூறுவதுடன், அவர்கள் வீடுகளில் பயன்படுத்திய பிளாஸ்டிக் கவர்களையும் கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தனர்.எங்கள் ஊரில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கி இருக்கிறேன். சுத்துப்பட்டு, 15 ஊர்களை சேர்ந்தவர்களுக்கு 4,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கி இருக்கிறேன். தற்போது பூச்செடிகளையும் வழங்கி வருகிறேன். என்னிடம் மரக்கன்றுகள் மற்றும் பழக்கன்றுகள் வாங்கிச் சென்ற பலரும், 'முதல் காய்ப்பு உனக்குதான்' என்று கூறி வந்தும் கொடுத்திருக்கின்றனர்.'நீ கொடுக்கும் மரக்கன்றுகள் வளர்வதை போல் நீயும் வாழ்க்கையில் வளர்வாய்' என்று பெரியவர் ஒருவர் வாழ்த்தினார். மனதிற்கு மிக நிறைவாக இருந்தது. 1 லட்சம் மரக்கன்றுகள் கொடுக்க வேண்டும்; அதுதான் என் லட்சியம்.தொடர்புக்கு: 96267 34040
02-Jun-2025