7 ஆக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது!
துாத்துக்குடி மாவட்டம், பண்டாரம்பட்டி கிராமத்தில் உள்ள, அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ்: துாத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் புதுக்கோட்டை தான், நான் பிறந்த ஊர். 2000வது ஆண்டு கூட்டாம்புளி கிராமத்தில் இருக்கும், அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தேன். 2012ல் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று, செய்துங்கநல்லுார் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிக்கு சென்றேன்.அந்த பள்ளியில் மொத்தம் எட்டு மாணவர்களே இருந்தனர். அனைவருமே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள். ஒரே ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கையை, 32 ஆக உயர்த்தினேன். 2014ல் நான் இந்த பள்ளிக்கு மாற்றப்பட்டபோது, இங்கும் ஏழு மாணவ - மாணவியர் தான் இருந்தனர்.மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்காக, முதலில் பள்ளியின் கட்டமைப்பை மாற்றி, குழந்தைகளை பள்ளிக்கு வரவழைத்தேன். ஏழு மாணவர்களையும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா அழைத்துச் சென்றேன். ஏழு மாணவர்களை வைத்து ஆண்டு விழா நடத்தினேன்.அவர்களின் திறமையை பார்த்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளை இந்த பள்ளியில் சேர்க்க முன்வந்தனர். மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, இன்று, 50 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.கொரோனா காலகட்டத்தில் நான் வாங்கிய சம்பளம், 7 லட்சம் ரூபாயை வைத்து, புதிய வகுப்பறை கட்டினேன். மீதி பணத்தில் மாணவர்களை டில்லிக்கு சுற்றுலா அழைத்துச் சென்றேன். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அளித்த, 21 லட்சம் ரூபாய் நிதியில், இரு வகுப்பறைகள் கட்டப்பட்டன. தற்போது, டிஜிட்டல் திரை வைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது.நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தும்போது ஒருமுறை, 'நாங்கள் ரயில், விமானத்தை தொலைவில் இருந்துதான் பார்த்திருக்கிறோம். எங்களை அழைத்துச் செல்வீர்களா?' என்று கேட்டனர்.உடனே விமான பயணத்திட்டம் தயாரானது. 5ம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவியர் உட்பட 10 மாணவர்களை தேர்ந்தெடுத்து, விமானத்தில் சென்னைக்கு அழைத்துச் சென்றேன். அவர்களுடன் இரு மாணவர்களின் பெற்றோரும் வந்தனர்.கடந்த மார்ச் 23ம் தேதி துாத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்தோம். சென்னையில் இறங்கி, வண்டலுார் மிருகக்காட்சி சாலைக்கு சென்றோம். மெட்ரோ ரயில் வாயிலாக எழும்பூர் வந்து, அங்கிருந்து ரயிலில் துாத்துக்குடி வந்து சேர்ந்தோம். ஒரே நேரத்தில் ரயில் மற்றும் விமான பயணம் செய்த மாணவர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி.