உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / வறண்ட நிலத்தில் வற்றாத லாபம் தரும் பெருநெல்லி!

வறண்ட நிலத்தில் வற்றாத லாபம் தரும் பெருநெல்லி!

பெருநெல்லியை சாகுபடி செய்து, கணிசமான லாபம் ஈட்டும், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டநாகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பன்: நெல்லிக்காயில் நீர்ச்சத்து இருப்பதால், கோடை காலத்தில் சாப்பிட மிகவும் ஏற்றது. 'தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்' என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பெருநெல்லி மரக்கன்றுகளை வறண்ட நிலங்களில் நடவு செய்தாலும் நன்றாக வளரும். ஒரு முறை நடவு செய்தால், 70 ஆண்டுகள் வரை மகசூல் கொடுக்கும். எனக்கு, 5 ஏக்கர் நிலம் உள்ளது. இது மிகவும் வறட்சியான பகுதி. என் தோட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றிலும் குறைவாகவே தண்ணீர் கிடைக்கும். கிடைக்கும் தண்ணீரை வைத்து, 3 ஏக்கரில் தென்னையும், சப்போட்டாவும் சாகுபடி செய்து வருகிறேன். மீதி 2 ஏக்கர் நிலத்தை தரிசாகத் தான் வைத்திருந்தேன். அந்த நிலத்து மண்ணை ஆய்வகத்தில் பரிசோதனை செய்து, ஆய்வு முடிவுகளை தோட்டக்கலைத் துறை அதிகாரிகளிடம் காட்டியதில், 'மண்ணுக்குத் தேவையான சத்துக்கள் போதுமானதாக உள்ளன. இந்நிலத்தில் பெருநெல்லி சாகுபடி செய்தால், அருமையாக விளையும்' என்று கூறினர். உடனே, பெரியகுளம் அரசு பழப் பண்ணையில், பெருநெல்லி ஒட்டுக் கன்றுகளை வாங்கி நடவு செய்தேன். அடுத்த ஆண்டு கோடையில் கடும் வறட்சி ஏற்பட்டது. ஐந்து மாதங்கள் வரை, எந்த பயிருக்குமே சரியாக தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை; சப்போட்டா, தென்னை மரங்களுக்குக் கூட கடுமையான பாதிப்பு ஏற்பட்டது; சில மரங்கள் கருகியே விட்டன. ஆனாலும், பெருநெல்லி மரங்களில் பாதிப்பே ஏற்படவில்லை; சில மரங்களில் மட்டும் இலைகள் உதிர்ந்து காணப்பட்டன. ஒரு கோடை மழை பெய்ததுமே, பெருநெல்லி மரங்கள் அனைத்தும் நன்றாக துளிர்விட்டு பசுமையாக மாறின. மூன்றாவது ஆண்டு, காய்ப்புக்கு வந்து மகசூல் கிடைக்க ஆரம்பித்தது. ஆண்டுக்கு இரண்டு முறை மகசூல் கிடைக்கிறது. ஒரு மரத்தில் ஓராண்டுக்கு சராசரியாக, 75 கிலோ காய்கள் கிடைக்கும். 2 ஏக்கர் பரப்பில் உள்ள, 200 மரங்கள் வாயிலாக, 15,000 கிலோ காய்கள் கிடைக்கின்றன. இங்கு விளையும் நெல்லிக்காய்களை, ஒட்டன்சத்திரம் சந்தையில் விற்பனை செய்கிறேன். கிலோவுக்கு, 17 - 25 ரூபாய் வரை கிடைக்கிறது. எப்படி பார்த்தாலும் கிலோவுக்கு சராசரியாக, 20 ரூபாய் கிடைத்து விடும். அந்த வகையில், 15,000 கிலோ விற்பனை வாயிலாக, ஆண்டுக்கு, 3 லட்சம் ரூபாய் வருமானமும், எல்லா செலவுகளும் போக, 2.40 லட்சம் ரூபாய் லாபமும் கிடைக்கிறது. இன்னும் நாட்கள் செல்ல செல்ல, மகசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். மகசூல் அதிகரித்தால், லாபமும் அதிகரிக்கும். தொடர்புக்கு: 94429 90298. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை