உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / என்னை மிகவும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் தேநீர் கடை!

என்னை மிகவும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் தேநீர் கடை!

மேடை நாடக கலைஞர், சினிமா நடிகை, விளம்பர குரல் கலைஞர் என, பல முகங்களை கொண்ட பத்மஸ்ரீ: எங்கள் பூர்வீகம் ஆந்திரா. ஆனா, சென்னை தான் எங்களுடைய முகவரி.எனக்கு மூணு சகோதரிகளும், ஒரு சகோதரரும் இருக்காங்க. அப்பா ஒரு ஆவணப்பட இயக்குனர்.திருப்பதி தேவஸ்தானம் பற்றி, முதன் முதலா ஆவணப்படம் எடுத்தவர் அவர் தான். அப்பாவுக்கு திடீர்னு உடல்நிலை சரியில்லாமல் போனதால, குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என் கையில் வந்தது. பிளஸ் 2 முடிச்ச கையோட கலைத் துறைக்கு வந்துட்டேன்.ஆரம்பத்துல மேடை நாடகங்கள்ல நடிச்சிட்டு இருந்தேன்; அது, சினிமா என்ட்ரிக்கான விசிட்டிங் கார்டா அமைந்தது. திருமணத்துக்கு பின், சினிமாவுக்கு குட்பை சொல்லிட்டு, குடும்ப வாழ்க்கையில் மூழ்கிட்டேன். தொடர்ந்து சினிமா, சீரியல் வாய்ப்புகள் வந்தாலும் நடிக்கவில்லை.கடந்த, 1991ல இருந்து இப்போ வரைக்கும் விளம்பரங்களுக்கு குரல் கொடுத்து வருகிறேன். இதுவரை 20,000 விளம்பரங்களுக்கு பேசி இருப்பேன்.இதுவரைக்கும் நான் பேசிய விளம்பரங்களில், 'விரும்பி வாங்குவது நிஜாம் பாக்கு' விளம்பரம் தான், எனக்கு பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது.ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் நான் பேசிய, 'சொக்க தங்கம் சொக்க தங்கம் ஜுவல்லரி...' விளம்பர டயலாக்கும் பெரிய ஹிட். மக்கள் என் குரலை எங்கு கேட்டாலும், அட இந்த பொண்ணுன்னு அடையாளம் கண்டுக்கிற பெருமையை விட வேறு என்ன வேண்டும்?இப்போது நான் தேநீர் கடை நடத்தி வருவதை பார்த்து, 'வாழ்க்கையில் நொடிச்சு போயிட்டதால் தான், இப்படி டீக்கடை நடத்துறாங்க போல'ன்னு பலரும் நினைக்கிறாங்க; ஆனால், அது உண்மை இல்லை. இப்போதும் விளம்பரங்களில் பிசியா பேசி வருகிறேன்.என் ஒரே மகளுக்கு திருமணமாகி விட்டது. நான், கணவர் மற்றும் அம்மாவுடன் வாழ்ந்து வந்தேன். அம்மா இறந்த பின், சிறிது தனிமையாக உணர்ந்தேன்; ஏதாவது செய்து, என் தனிமையை போக்க நினைத்தேன்.சென்னையில் நான் வசிக்கும் பகுதியில் தேநீர் கடை வைத்தேன். டீ குடிக்க வரும் பல வகை மனிதர்களுடன் பேசி, சிரித்து கலகலப்பா போகிறது வாழ்க்கை. என் இந்த முடிவுக்கு, கணவர் மிகவும் ஆதரவாக இருந்தார்.டீக்கடை துவங்கி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. இந்த வேலை என்னை மிகவும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.பட்டுப்புடவை கட்டிக்கிட்டு டீக்கடையில் வேலை செய்வதாக பலரும் நினைக்கலாம். கடவுள் கொடுத்த அற்புதமான வாழ்க்கையில், என்னை நானே, 'பளிச்' என்று வைத்துக்கொண்டு, உற்சாகமாக இருக்க விரும்புகிறேன். என் கடையில் வந்து டீ குடிப்போருக்கும் அந்த உற்சாகம் தொற்றிக்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !